சென்னையில் செய்தியாளர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று..!உடன் பணியாற்றியவர்களுக்கு பரிசோதனை!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் முதல் முறையாக சென்னையில் செய்தியாளர்கள் ,இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர்களுடன் பணியாற்றியவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்ட்டுள்ளதுடன் தனிமைபடுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் , உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை காப்பாற்ற நேரடி போராடி வரும் மருத்துவர்களும், செவிலியர்களும் பெருமளவில் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

 

இதேபோல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மட்டுமின்றி, கொரோனா தொடர்பான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க களத்தில் நின்று செய்தி சேகரிக்கும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினரும் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் நாளிதழ் செய்தியாளர் ஒருவரும், செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் துணை ஆசிரியராக பணிபுரியும் ஒருவரும் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சென்னையில் பிரபல
நாளிதழ் ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வரும் 24 வயது பத்திரிகையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் திருவல்லிக்கேணியில் அவர் வசித்து வந்த மேன்சன் அமைந்துள்ள பெரிய தெரு பகுதி தனிமைபடுத்தப்பட்டுள்ளது. அவருடன் தங்கியிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் 3 பேரும் தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதே போல், சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆசிரியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பணிபுரிந்து வந்த தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

சென்னையில் செய்தியாளர்கள்2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால்
சுகாதாரத்துறை சார்பில் தினமும் நடைபெறும் கொரோனா பற்றிய செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி தினமும் அறிக்கை மூலம் மட்டுமே தகவல் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, தமிழகத்தில் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா கண்டறியும் சிறப்பு பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் எனவும், அரசும்,
அதிகாரிகளும் நேரடி செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்க்க வேண்டும் எனவும்
சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.


Leave a Reply