“ஒரு ரேபிட் டெஸ்ட் கிட்டின் விலை ரூ.600 மட்டுமே!!” மு.க.ஸ்டாலின் சந்தேகத்திற்கு வெளிப்படையாக தமிழக அரசு பதில்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா பரிசோதனையை துரிதமாக நடத்த தமிழக அரசு கொள்முதல் செய்துள்ள ரேபிட் டெஸ்ட் கருவியின் விலை என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், இந்த கிட் ஒன்றின் விலை ரூ.600 என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது முதலே, தமிழக அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாகவும், உண்மை தகவல்களை மறைப்பதாகவும் தொடர்ந்து விமர்சித்து வரும் மு.க.ஸ்டாலின், சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கியதிலும் சந்தேகம் எழுப்பியிருந்தார். ரேபிட் கிட் வாங்கியது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல், தமிழக அரசும் எத்தனை கருவிகள் வாங்கப்பட்டுள்ளது ? ஒரு கருவியின் விலை என்ன? என்பதை வெளிப்படைத் தன்மையாக அறிவிக்க வேண்டும் என இன்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

மு.க.ஸ்டாலின் எழுப்பிய இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசு நிர்ணயித்த விலையான ரூபாய் 600 விலையில் தான் ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கப்பட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட் ஒரு முறை தான் பயன்படுத்த முடியும்.ஒரு கிட்டின் விலை ரூபாய் 600 என்று தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசு ஆர்டர் செய்த போது சத்தீஸ்கர் மாநில அரசு கொள்முதல் செய்த நிறுவனத்தின் பெயர் பட்டியலில் இல்லை என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

 

தமிழக அரசு, சீனாவில் இருந்து மொத்தம் 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்க ஆர்டர் செய்திருந்தது. ஆனால் 24 ஆயிரம் கருவிகள் மட்டுமே வந்து சேர்ந்துள்ளன. மத்திய அரசும் 12 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்களை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. இதனால் மொத்தம் 36 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம், தமிழகத்தில் இன்று முதல் கொரோனா பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply