ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பெற்ற 30 பேர் டிஸ்சார்ஜ்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 30 பேர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே நாளில் அதிக நபர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 30 பேர் கொரொனா பாதித்து சிகிச்சைக்காக ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் மார்ச் மாத இறுதியில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இவர்களுக்கு தினமும் ஷிப்ட் அடிப்படையில் 105 மருத்துவர்கள், 110 செவிலியர்கள் கொண்ட மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். நேரத்திற்கு சரியான உணவு, மருந்து ஆகியவற்றை அளித்து கனிவுடன் கவனித்ததற்கு உரிய பலன் கிடைத்தது. 14 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் 30 பேரும் கொரொனா பாதிப்பில் இருந்து விடுபட்டது தெரியவந்தது.

 

இரண்டாவது பரிசோதனையிலும் தொற்று இல்லை என முடிவு வரை மருத்துவமனையில் இருந்த மருத்துவ குழுவினரும் சிகிச்சை பெற்றவர்களும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்தனர். கொரொனா தொற்றிலிருந்து குணமடைந்து முப்பது நபர்களும் வீட்டிற்கு சென்றாலும் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

17 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பியது தங்களுக்கு மட்டுமின்றி கொரொனா பாதிப்பால் சிகிச்சை பெறும் அத்தனை பேருக்கும் நம்பிக்கை கிடைத்துள்ளதாக குணமடைந்தார் தெரிவித்துள்ளனர். நோய்தொற்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீட்டிற்க்கு செல்வோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்து அதிகரித்திருப்பது கொரொனாவை வெல்ல நினைப்பவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply