ஊரடங்கு எதிரொலி : மீன் பிடி தடைக்காலத்தை குறைக்க வேண்டும்..! தமிழக மீனவ மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக போடப்பட்ட ஊரடங்கு நாட்களையும் கணக்கில் வைத்து மீன்பிடி தடைக்காலத்தை குறைக்க வேண்டும் என தமிழக மீனவ மக்கள் கட்சி தலைவர் கோல்டன் பரதர் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளை முன்வைத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

 

தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் 24- தேதி முதல் கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அதே நாள் முதல் மத்திய அரசும் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பித்து, 2-வது முறையாக மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.

 

இதனால் மீனவர்களும் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபடாமல் உள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடல் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டி அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் புதுவை மாநிலங்கள் அனுமதியை மேற்கோள் காட்டி தமிழக மீனவ மக்கள் கட்சி மற்றும் பல்வேறு மீனவ அமைப்புகள் அரசிற்கு கோரிக்கை வைத்தன.

 

அதனை ஏற்று தமிழக அரசும், மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பிற்காக தமிழக அரசிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், பெரும்பாலான மீனவர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை உண்டாக்கவில்லை. ஏனெனில் வருடம் தோறும் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 – ந் தேதி தொடங்கி 60 நாட்கள் கடைபிடிக்கப்படுவது வழக்கம்.

 

ஏற்கனவே, பல நாட்களாக தொழில் இல்லாமல் வாடும் மீனவர்களுக்கு இந்த தடைக் காலமும் பெரும் வாழ்வாதார இழப்பை ஏற்படுத்தும். எனவே முந்தைய மாதத்தில் தமிழக அரசால் அறிவித்த ஊரடங்கு தேதியான மார்ச் 24-ம் தேதியிலிருந்து கணக்கில் எடுத்துக் கொண்டு மீனபிடி தடை நாட்களான 60 நாட்கள் நிறைவு பெரும் வகையில் மே மாதம் 22 ஆம் தேதியை நிறைவு நாளாக அறிவித்து மே 23-ம் தேதியிலிருந்து மீனவர்களை கடலில் சென்று மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.

 

அப்படி இல்லை என்றாலும் இந்த வருடம் மட்டும், வருடந்தோறும் கடைபிடிக்கப்படும் மீன்பிடி தடை நாட்களான 60 நாட்களை 30 நாட்களாக குறைத்து மீனவர்களின் வாழ்வாதரம் காப்பாற்றப்பட வேண்டும் என்று தமிழக மீனவ மக்கள் கட்சியின் தலைவர் கோல்டன் பரதர் மற்றும் தமிழக மீனவ மக்கள் கட்சியின் மாநில மீனவரணி செயலாளர் டோனி சார்லஸ் ,மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் மரிய லியோன் ஆகியோர் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 


Leave a Reply