“ரூ.500 விலையில் 19 மளிகைப் பொருட்கள்!!” ரேசன் கடைகளில் இன்று முதல் கிடைக்கும்..! அமைச்சர் காமராஜ் அறிவிப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள 500 ரூபாய்க்கு 19 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு இன்று முதல் ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

 

கொரோனா வைரஸ் பாதிப்பால் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24-ந் தேதி 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டது.கடந்த 14-ந் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைந்த நிலையில், வரும் மே 3-ந்தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக, காய்கறி மற்றும் மளிகை கடைகளை திறக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடும் நிலவுவதால் விலைவாசியும் கணிசமாக உயர்ந்து மக்களை மேலும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

 

இதனால், அத்தியாவசியப் பொருட்கள் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கச் செய்யும் வகையில் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்து, ரூ.500 மதிப்புள்ள19 வகையான மளிகைப் பொருட்கள் வெளிச்சந்தை விலையை விட ரூ.100 வரை குறைவாக இருக்கும் என புள்ளி விபரத்துடன் விலைப் பட்டியலையும் வெளியிட்டிருந்தது.

அதன்படி, இன்று முதல் ரேசன் கடைகளில் இந்த 19 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யடுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக மே மாதத்திற்கான விலையில்லா ரேசன் பொருட்கள், தினசரி 150 பேருக்கு வீதம் டோக்கன் முறையில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

 

ரேசன் கடைகளில் ரூ.500 விலையில் வழங்கப்படும் மளிகைத் தொகுப்பில், அரை கிலோ துவரம்பருப்பு, அரைகிலோ உளுத்தம் பருப்பு, கால் கிலோ கடலை பருப்பு, மிளகு 100 கிராம், கடுகு100கிராம், சீரகம் 100 கிராம், வெந்தயம் 100 கிராம் மற்றும் டீதூள், மஞ்சள்தூள் உப்பு, பூண்டு உள்ளிட்ட 19 பொருட்கள் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply