கொரோனா: அமெரிக்காவில் ஒரே நாளில் 2600 பேர் பலி..! இந்தியாவிலும் ஒரே நாளில் 1300 பேருக்கு பாதிப்பு!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


கொரோனா வைரஸ் தொற்றால், உலகின் பல நாடுகளில் உயிரிழப்பு விர்ரென உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 2600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்படி ஒரே நாளில் ஒரு நாட்டில் அதிகம் பேர் இறந்துள்ள மோசமான சாதனையையும் அமெரிக்கா படைத்துள்ளது.

 

உலகில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு கூடிக் கொண்டே செல்கிறது. இந்த வைரஸ் பாதிப்பு தொடங்கிய நாளில் இருந்து, நேற்று ஒரு நாளில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 ஆயிரம் என்ற அளவுக்கு உயர்ந்து, உயிரிழப்பும் ஒரே நாளில் 7500 ஆக உயர்ந்து உலக நாடுகளை நடுங்க வைத்துள்ளது. இதுவே கடந்த 2 மாதங்களில் ஒரே நாளில் நிகழ்ந்த அதிகபட்ச பாதிப்பு மற்றும் அதிகபட்ச உயிரிழப்பும் ஆகும்.

 

இதனால், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 84 ஆயிரத்து 596 ஆகவும், மொத்த உயிரிழப்பு1,34,677 ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் அமெரிக்கா தான் மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அந்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 6,44,318 எனவும், உயிரிழப்பு 28,554 ஆகவும் உயர்ந்துள்ளது.

 

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2600 பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனாவால் ஒரு நாட்டில் ஒரு நாளில் நிகழ்ந்த அதிகபட்ச உயிரிழப்பாகும். மொத்த உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலி (21,645), ஸ்பெயின் (18,812), பிரான்ஸ் (17,162),பிரிட்டன் (12,868), பெல்ஜியம் (4,440), ஆகிய நாடுகள் மோசமான உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றன.

 

இந்தியாவிலும் நேற்று ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கையாக 1300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி 12,456 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 423 ஆக அதிகரித்து, கொரோனா பாதிப்பில் உலக அளவில் டாப் 20 இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது அச்சத்தை அதிகரித்துள்ளது.


Leave a Reply