“கொரோனா செய்திகளை வாசிக்க மீண்டு(ம்) வந்த அமைச்சர் விஜயபாஸ்கர்!!” திடீரென காணாமல் போனதற்கு கூறிய விளக்கம் இதுதான்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆரம்பமான நாள் முதல் தினமும் காலை, மாலை, இரவு என நேரம் பாராது மீடியாக்கள் முன் கொரோனா பற்றிய அப்டேட்டுகளை கொடுத்து வந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால் திடீரென கடந்த 17 நாட்களாக கொரோனா செய்தி வாசிப்பு பணியை சுகாதார செயலாளர் மேற்கொண்டு வந்தார்.

 

தினமும் மாலை 6 மணிக்கு பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக்கி வந்தார். இடையில் சில நாட்கள் தலைமைச் செயலாளர் சண்முகமும் செய்தியாளர்களை சந்தித்தார். இதனால், அமைச்சர் விஜயபாஸ்கரை திட்டமிட்டே ஓரம் கட்டியதாகக் கூட செய்திகள் வெளியாகி பரபரப்பானது. அதற்கேற்றாற்போல் அமைச்சர் விஜயபாஸ்கரும், தன் சொந்த மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் சில நாட்கள் முகாமிட்டார்.

 

அங்கு தனது தொகுதியில், தமிழக அரசின் கொரோனா நிவாரணம் வழங்குவது, ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்குவது, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விசிட் செய்வது பணிகளை பார்த்தார். கொரோனாவால் தமிழகம் முழுவதும் பீதியில் உள்ள நிலையில், சுகாதார அமைச்சர் தனது சொந்த மாவட்டத்துக்குள் மட்டும் முடங்கியது குறித்து பல்வேறு சர்ச்சைகள் றெக்கை கட்டி பறந்தன. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூட, சுகாதார அமைச்சரை ஓரங்கட்டியது குறித்து கேள்வியும் எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, கொரோனா பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, இத்தனை நாட்களாக காணாமல் போனதன் காரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

 

கொரோனா தொற்றுக் கான சிகிச்சைகள் மற்றும் ஏற்பாடுகளை கவனிக்க நான் பல மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது . அதனால்தான் முதல்வர் உத்தரவுபடி சுகாதாரத்துறை செயலாளர் கொரோனா குறித்த புள்ளி விவரங்களை வழங்கி வந்தார்.

 

இதுதானே தவிர, வேறு விதமான சிந்தனைக்கு நீங்கள் செல்லவேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் மழுப்பலாக பதிலளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


Leave a Reply