நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரை..! ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையை உரை நிகழ்த்து நிறார். ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் பிரதமர் உரையில் இடம் பெறும் என்பதால் மீண்டும் ஒருமுறை அவருடைய உரை நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 3-வது வாரத்தில் இதன் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி மார்ச் 20-ந் தேதி நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்தினார். அப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது ஒன்றே கொரோனா பரவலை தடுப்பதற்கான தீர்வு என்பதை வலியுறுத்திய பிரதமர் மோடி, ஒரு நாள் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க அழைப்பு விடுத்தார். அதன்படி மார்ச் 22-ந் தேதி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

 

தொடர்ந்து 2வது முறையாக மார்ச் 24-ந் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்திய பிரதமர், அன்று நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 14-ந் தேதி நள்ளிரவு வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் கடந்த 20 நாட்களாக ஒட்டுமொத்தமாக இந்திய மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர்.. அனைத்து தொழில்களும் முடங்கி, சாலைகளில் போக்குவரத்து ஏதுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவே வெறிச்சோடி காணப்படுகிறது.

 

இந்நிலையில், கடந்த வாரம் 3-வது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து விட்டு , 9 நிமிடங்களுக்கு அகல் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றுமாறு அழைப்பு விடுத்தார். பிரதமரின் இந்த அழைப்பையும் நாட்டு மக்கள் ஒற்றுமையாக நிறைவேற்றினர்.

 

இந்நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு நாளை நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள இந்த சூழலில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனை பிரதமர் மோடியே அறிவிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி அறிவிப்பு செய்வதில் தாமதமானதால் ஒடிசா, பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலங்கானா, மே.வங்கம், கர்நாடகா போன்ற மாநிலங்கள் வரும் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தன்னிச்சையாக அறிவித்துவிட்டன.

 

இந்நிலையில், நாளை நள்ளிரவுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், நாளை காலை10 மணிக்கு பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி உரையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்றாலும், ஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படாது என்ற தகவல்கள் சில நாட்களாக பரபரப்பாக வெளியாகி வருகிறது.

 

கடந்த 24-ந் தேதி உரை நிகழ்த்திய போது, கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களின் உயிர்தான் முக்கியம்; எவ்வளவு பொருளாதாரப் பாதிப்புகள் வந்தாலும் அப்புறம் பார்க்கலாம் என்றார் பிரதமர் மோடி. ஆனால் இப்போதோ மக்களின் உயிரும் முக்கியம்; அதே வேளை யில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் அவசியம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

அதன்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பை சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என 3 மண்டலங்களாக பிரித்து அதற்கேற்ப ஊரடங்கு சில பகுதிகளில் தளர்த்தப்படலாம் என்றும் தெரிகிறது. இதனால் பிரதமர் மோடியின் நாளைய உரையும் நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.


Leave a Reply