தமிழகத்தில் என்று இந்த நிலைமை மாறுமோ..? “கொரோனா” பதற்றத்திலும் “லாவணி கச்சேரி” நடத்தும் அதிமுக., திமுக., கட்சிகள்!!

Publish by: செய்தி்ப் பிரிவு --- Photo : கோப்பு படம்


தமிழகத்தில் கொரோனா பீதி ஒரு பக்கமும், ஊரடங்கால் ஏழை ,எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவலம் மற்றொரு புறம் என்றால், தேர்தல் காலம் போல ஆளும் அதிமுகவும், எதிர்க் கட்சியான திமுகவும் வழக்கம் போல ஒரு வரையொருவர் புழுதிவாரித் தூற்றி “லாவணிக் கச்சேரி” நடத்துவது தான் “கொடுமையிலும் கொடுமைடா சாமீ” என்ற ரகமாகி உள்ளது.

 

ஜனநாயக நாட்டில், ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டுவதுடன், ஆலோசணைகளையும் வழங்க வேண்டும் என்பதற்காகத் தான், எதிர்க்கட்சிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க அரசியல் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அமைச்சர்களுக்குரிய அந்தஸ்துடன், முன் வரிசையில் பிரதமர், முதல்வர் போன்றோருக்கு நேர் எதிராக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

எந்தப் பிரச்னையானாலும் எதிர்க்கட்சித் தலைவர் எந்த நேரத்திலும் எழுந்து கூடுதல் நேரம் பேச வாய்ப்பும் வழங்கப்படுகிறது. அதே போல் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டும் பிரச்னைகளை கவனமுடன் காது கொடுத்து கேட்பதும், அதற்கு மதிப்பளித்து உரிய பதில் அளிப்பதும் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபாகும்.

 

ஆனால், இந்த மரபு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பது தான் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது பெரும் கேள்வியாக எழுகிறது. சுதந்திரம் பெற்ற முதல் 20 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், மக்கள் நலன் தான் பிரதானம் என்று ஆளும் கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் செயல்பட்டன. 1967ல் அண்ணா ஆட்சிக்கு வந்த போது கூட அவர் முதல்வராக இருந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே செய்தார். அரசின் நல்ல திட்டங்களை வரவேற்பதும், குறைகளை சுட்டிக் காட்டுவதும் என எதிர்க்கட்சிகள் கூட நாகரீக அரசியல் நடத்தின.

ஆனால், 1969-ல் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற காலம் முதல் தமிழக அரசியல் களத்தின் போக்கு கொஞ்ச கொஞ்சமாக மாறி இப்போது தலைகீழ் நிலைமைக்கு சென்று விட்டதையே காண முடிகிறது.கருணாநிதி காலத்தில் அவரை குற்றம் கூறிய எம்.ஜி.ஆர்., அடுத்து ஆட்சியைப் பிடித்தார். அடுத்த 10 ஆண்டு கால எம்.ஜி.ஆர். ஆட்சியை குறை சொல்வதையே கருணாநிதி வாடிக்கையாகக் கொள்ள, எம்.ஜி.ஆரோ எதையும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அப்புறம், ஏதேனும் அரசு மீது குற்றம், குறை சுமத்தினால் உன் யோக்யதை தெரியாதா? என குற்றம் கூறுபவரையே திருப்பி பதிலடி கொடுப்பது தான் என கடந்த 50 ஆண்டுகாலமாக மாறி, மாறி ஆட்சி செய்து வரும் அதிமுக, திமுக ஆட்சியாளர்களின் வழக்கமான மாபெரும் சாதனை எனவே கூறலாம்.

 

ஆனால், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைவர்கள் ஆட்சி நடத்தியதால் இப்படிப்பட்ட எதிர்க்கருத்துகள் இரு கட்சிகளிடையே எழுந்தாலும், மக்களைப் பாதிக்கும் விஷயத்தில் அவர்கள் அக்கறை செலுத்தத் தவறியதில்லை என்பதை ஒப்புக் கொண்டே தான் ஆக வேண்டும்.

 

ஆனால், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் அடுத்தடுத்த மறைவுக்குப் பின், ஆளும் அதிமுக அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க் கட்சியான திமுகவின் தலைமைப் பொறுப்பில் உள்ள மு.க.ஸ்டாலினும் ஒருவரையொருவர் விமர்சிக்கும் போக்கைப் பார்த்தால், குழாயடிச் சண்டை தோற்று விடும் போலவே தெரிகிறது.ஆளும் அதிமுக அரசு மீதும், ஆட்சியாளர்கள் மீதும் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்தால், குற்றச்சாட்டுக்கு உரிய பதில் கிடைப்பதை விட, உங்கள் ஆட்சியில் கூட இப்படித்தான் நடந்தது. நீங்க என்ன யோக்யவான்களா? என்று பழைய சம்பவங்களை உதாரணம் காட்டி உதார் விடுவதே ஆளும் அதிமுக தரப்புக்கு வாடிக்கையாகிவிட்டது.

 

அதே நிலைமைதான் இன்று, கொரோனா வைரஸ் பாதிப்பு என்னும் அசாதாரண சூழலில் தமிழகமும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் இரு கட்சிகளும் மாறி, மாறி வசைமாரி பொழிவது கேலிக்கூத்தாகி வருகிறது என்றே கூறலாம். இந்த கொரோனாவின் பிடியில் சிக்கி ஒட்டுமொத்த உலகமே சின்னாபின்னமாகிக் கிடக்கின்றன.

 

இந்தக் காலக்கட்டத்தில், உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தங்கள் பகைமையை மறந்து, ஒன்று சேர்ந்து கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பதை காணமுடிகிறது. அது மட்டுமின்றி, நெடுங்காலமாக ஒன்றுக்கொன்று பகைமை பாராட்டி வந்த நாடுகள் கூட இந்த கொரோனா எதிர்ப்பு போரில் ஒன்றுக்கொன்று உதள களை பரிமாறத் தொடங்கி விட்டன. ஏன்?இந்தியாவின் பிற மாநிலங்கள் பலவற்றிலும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கொரோனா ஒழிப்பில் ஒன்றிணைந்துள்ளதை காணமுடிகிறது.

 

ஆனால், தமிழகத்திலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதிமுக, திமுக இரு கட்சிகளும் ஒன்றையொன்று குறை கூறி லாவணிக் கச்சேரி நடத்துவது மட்டும் தீர்ந்தபாடில்லாமல் தொடர்வது தான் வேடிக்கையாக மட்டுமின்றி வேதனையாகவும் உள்ளது என்றே கூறுமளவுக்கு சென்று விட்டது எனலாம்.

கொரோனாவை ஒழிப்பதில் முழு ஒத்துழைப்பு தரத் தயார் என்று கூறி, சில பிரச்னைகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துவதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதாசீனப்படுத்தி வருகிறார். இதனால் பொங்கி எழுந்து அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின் . உடனே முதல்வர் எடப்பாடியோ, கொரோனா பாதிப்பிலும் திமுக சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது என்கிறார். அதற்கு பதிலடியாக முதல்வர் எடப்பாடியை சர்வாதிகாரத்தனத்துடன் செயல்படுவதாக வசை பாடுகிறார் ஸ்டாலின் .

 

போதாக்குறைக்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரோ, கொரோனா வைரஸ் பரவக் காரணமே திமுக தான் என, ஏதோ ஆராய்ந்து கண்டறிந்தது போல் குற்றம் சாட்டுகிறார். இதற்கு துரைமுருகனை விட்டு ஜெயக்குமாருக்கு பதிலடி தருகிறது திமுக. அது மட்டுமின்றி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு தொடர்ந்து வலியுறுத்தினாலும் ஆளும் அதிமுக அரசு செவிமடுக்கவில்லை என்ற கோபத்தில், திமுகவே வரும் 15-ந் தேதி அனைத்துக் கட்சிக் கட்சிக் கூட்டத்திற்கு தனியாக அழைப்பு விடுத்துள்ளது.இது எந்த அளவுக்கு பலனளிக்கும் என்று தெரியாவிட்டாலும், தமிழகத்தில் அரசியல் சர்ச்சை மட்டும் மேலும் பெரிதாவது உறுதி.

 

இப்படி, கடந்த சில நாட்களாக கொரோனா என்னும் கொடிய வைரசின் வீரியம் புரியாமல், ஏதோ தேர்தல் காலத்தில் வீராவேசமாக சொற்போர் நடத்துவது போல இரு கட்சிகளும் லாவணிக் கச்சேரி பாடுவது அதி முக்கிய மக்கள் பிரச்னையை பின்னுக்குத் தள்ளுவது போலாகி வருகிறது.

 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியதில், அண்டை மாநிலமான கேரளாவைப் பார்த்தாவது நம் தமிழக அரசியல்வாதிகள் பாடம் கற்க வேண்டிய அவசர, அவசிய நேரமிது. அங்கு, இந்தப் பிரச்னையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளிடையே சிறிதளவும் சலசலப்பு கிடையாது. கொரோனா ஒழிப்பு போரில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து கை கோர்த்ததே சாதிக்க முடிந்ததற்கு சிறந்த உதாரணமாகி விட்டது. அப்படி தமிழகத்திலும் வேற்றுமை மறந்து ஒற்றுமை நிலவ வேண்டிய காலகட்டமிது. இரு திராவிடக் கட்சியினரும் செய்வார்களா? மக்கள் மீது அக்கறை காட்டுவார்களா? சாத்தியமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Leave a Reply