தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு..! மொத்த எண்ணிக்கை 1173 ஆக உயர்வு!! 2 நாட்களாக உயிரிழப்பும் இல்லை!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் இன்று மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது. நேற்றும் இன்றும் உயிரிழப்பு ஏதுமில்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில்,இதுவரை 12746 பேரின் ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்றவர்களில் இதுவரை 58 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கவனித்து முன்கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், உயிரிழப்புகளை தவிர்த்துள்ளோம்.

 

அதிவிரைவாக கொரோனா சோதனை நடத்தும் ரேடிட் டெஸ்ட் கருவிகள் ஓரிரு நாளில் வந்து சேரும். ஆனாலும், பரிசோதனைக்கான கருவிகள் தற்போது போதுமான அளவில் உள்ளன. முகக் கவசங்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் உள்ளன.

 

கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படக் கூடாது என தமிழக சுகாதாரத் துறை தீவிரம் காட்டி வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை. சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனால் அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால் தமிழக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

 

இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 98 பேரில் 91 பேர் ஒரு இடத்துக்கு சென்று வந்தவர்கள். மேலும் 3 பேர் இவர்களுடன் தொடர்பில் தொடர்பில் இருந்தவர்கள். மற்ற 3 பேர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் ஆவர். இன்று திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் மொத்த எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது என பீலா ராஜேஷ் தெரிவித்தார்.


Leave a Reply