10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மீண்டும் தள்ளிவைப்பு..! ரத்து செய்யப்பட மாட்டாது என அறிவிப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாகவும், தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, அதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளி இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 10,11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளில் 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மட்டும். முழுமை பெற்றுள்ளன.11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளில் ஒரு சில பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டன.

 

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பே, ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு ஏப்ரல் 14 -ந் தேதிக்கு பின்னர் புதிய தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஏப்ரல் 30-ந் தேதி வரையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா? ரத்தாகுமா? என்பது கேள்விக்குறியானது.

 

ஆனால் பள்ளிக் கல்வித்துறையோ, 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாகவும், ரத்து செய்யப்பட மாட்டாது என அறிவித்துள்ளது. கல்வி அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு , புதிய தேர்வு தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வி துறை செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.


Leave a Reply