ஊரடங்கு மேலும் எத்தனை நாட்களுக்கு நீட்டிப்பு? 11-ந் தேதி மாநில முதல்வர்கள் ஆலோசனைக்குப் பின் அறிவிக்கிறார் பிரதமர் மோடி!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த , ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க, பல்வேறு மாநிலங்களும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனால் ஊரடங்கை நீட்டிப்பது உறுதியான நிலையில், மேலும் எத்தனை நாட்களுக்கு நீட்டிப்பது என்பது குறித்து வரும் 11-ந் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் மீண்டும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய பின் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

 

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதால், முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று 15 நாட்கள் ஆகிறது. இன்னும் ஒரு வாரத்தில் ஊரடங்கு காலம் முடிவடைய உள்ள நிலையில், இப்போது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி, இதுவரை 5600-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, பலி எண்ணிக்கையும் 150 ஐ கடந்துள்ளது.

 

இந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு வரும் 14-ந் தேதிக்குப் பிறகும் நீடிக்குமா? தளர்த்தப்படுமா? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

 

வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை மூன்றரை மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இந்த ஆலோசனையில் பங்கேற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், ஊரடங்கை நீட்டிப்பு செய்ய ஆதரவு அளித்த அதே வேளையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுந்தர மக்களின் பிரச்னைகளை களைய மத்திய அரசு உரிய கவனமும், நிவாரணமும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

 

எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ஒட்டு மொத்த உலக நாடுகளிடையே, கொரோனா வைரஸ் அதிகம் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. நாட்டில் தற்போது சமூக நெருக்கடி போன்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மிகவும் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டு உள்ளது. இப்போது நாம் அனைவரும் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அவசியமாக உள்ளது.

 

இந்நிலையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நிபுணர்கள் பலரும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என கூறி வருகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

இதனால், ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படலாம் என்பது உறுதியாகியுள்ளது என்றே தெரிகிறது. இந்நிலையில், வரும்11-ந்தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஊரடங்கை எத்தனை நாட்களுக்கு நீட்டிப்பது, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மேலும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனைகளை பிரதமர் மோடி கேட்டறிவார் என்றும், அதன் பின் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


Leave a Reply