கோவை உழவர் சந்தைகளில் கொரோனா தொற்று தடுப்பு கிருமி நீக்கி சுரங்கம் — உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கொரோனா எனும் கொடிய அரக்கன் உலகையே அச்சுறுத்தி வருகிறான்.இந்த வைரஸ் தாக்குதலினால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவையும் இவ்வைரஸ் விட்டு வைக்கவில்லை.இதுவரை இந்தியாவில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்குதலினால் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதியன்று 86 பேரும்,ஏப்ரல் 6 ஆம் 50 பேரும் என இதுவரை 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.இந்த நிலையில் இந்நோயின் தீவிரத்தை குறைக்கும் வகையில் மத்திய,மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்த நிலையில் கோவையில் முக்கிய பேருந்து நிலையங்களான உக்கடம்,காந்திபுரம் உள்ளிட்டவை மக்களின் அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் கிடைக்கும் வகையில் மார்க்கெட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.தமிழக அரசு மக்களின் அத்தியாவசிய தேவையான பால்,மளிகை,காய்கறிகள்,பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட வேண்டும் என உத்தரவிட்டது. அதனடிப்படையில் காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.மேலும்,மக்கள் போதிய சமூக இடைவெளி விட்டு பொருட்களை பெற்றுச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொது மக்கள் கூடும் இடங்களான கோவை சுந்தராபுரம்,ஆர்.எஸ்.புரம்,காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உழவர் சந்தையில் கொரோனா தொற்று தடுப்பு கிருமி நீக்கி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.அதனை இன்று மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார் .பின்னர்,அமைச்சர்,எம்.எல்.ஏ – க்கள்,அரசு அதிகாரிகள் இச்சுரங்கத்தினை துவக்கி வைத்தனர்.

 

அதனைத் தொடர்ந்து உக்கடம் காய்கறி மார்க்கெட், ஆர்.எஸ்.புரம் உழவர்சந்தை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் நிலையத்தில் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து குனியமுத்தூர் சாலையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனத்தையும் அமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்.

 

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ – க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார்,அம்மன் அர்ச்சுனன்,எட்டிமடை சண்முகம்,மாவட்ட ஆட்சியர் ராசாமணி,மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply