“ஊரடங்கு நீட்டிப்பு உறுதியாகிறது!!’ பல மாநிலங்களும் நெருக்கடி கொடுப்பதால் மத்திய அரசு பரிசீலனை!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவை தளர்த்தக் கூடாது; மேலும் நீட்டிக்க வேண்டும் பல்வேறு மாநிலங்களும் நெருக்கடி கொடுக்கும் நிலையில், ஏப் 14-ந் தேதிக்குப் பிறகு எத்தனை வாரங்களுக்கு நீட்டிப்பது என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதால், மத்திய அரசு கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஒட்டுமொத்த தேசமும் முடக்கப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர்.அத்தியாவசியப் பொருட்கள் போக்குவரத்து தவிர்த்து அனைத்து போக்குவரத்தும் முடங்கி சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இந்த 21 நாள் ஊரடங்கால், ஏழைகள் மற்றும் அன்றாட கூலிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

 

இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கு நல்ல பலனைத் தந்துள்ளது என்றாலும், 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவல், கடந்த சில நாட்களாக தினமும் அதிகரித்தே வருகிறது. அதிலும் கடந்த 10 நாட்கள்ல் இதன் தாக்கம் அதிகரித்து தற்போது பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கி, உயிரிழப்பும் 132 ஆக அதிகரித்துள்ளது.

 

கொரோனா பரவல் மேலும் அதிகரித்து சமூக ரீதியில் பரவுவதை கட்டுப்படுத்த அடுத்த சில வாரங்கள் மேலும் அதிக கவனம் செலுத்துவதுடன், கொரோனா பாசோதனையை மேலும் அதிகம் பேரிடம் நடந்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், தற்போதைய நிலையில் அதற்கான மருத்துவ உபகரணங்கள் கைவசம் இல்லாததால், அவசர அவசரமாக ஆர்டர் செய்யப்பட்டு வரும் 10-ந் தேதி முதல் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

 

இந்நிலையில், வரும் 14-ந் தேதியுடன் ஊரடங்கை தளர்த்தக் கூடாது. இப்போது தான் கொரோனா வைரஸ் பரவலின் முக்கியக் கட்டம் ஆரம்பமாகியுள்ளது. எனவே மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தெலங்கானா மாநிலம் முதல்வர் சந்திரசேகர ராவ் வெளிப்படையாக . வேண்டுகோள் விடுத்தார். அவரைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ம.பி., உ.பி., அசாம், பஞ்சாப், கர்நாடகா என பல்வேறு மாநிலங்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளன.

 

இதனால், இன்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்போதைய நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது என்பது உறுதியாகிவிட்டதாகவும், எத்தனை வாரங்களுக்கு . நீட்டிப்பது என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Leave a Reply