10,11,12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை பள்ளிகளே முடிவு செய்ய உத்தரவிட வேண்டும்..!தமிழக அரசுக்கு ஆசிரியர் நல கூட்டமைப்பு யோசனை!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : எம்.கே.டி


12ம் வகுப்பு 11ம் வகுப்பு 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை, காலாண்டு அரையாண்டு தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளே முடிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த சூழ்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.சி பள்ளிகள் 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி அடைய செய்யவேண்டும் என்றும், அதேபோன்று 9 ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளில் நடத்திய தேர்வை வைத்து மாணவர்களை தேர்ச்சியடைய செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .

இதனை பின்பற்றி தமிழக அரசும் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியையும் வகுப்புகளில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில், அதாவது காலாண்டு அரையாண்டு மற்றும் பயிற்சி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே அறிவிக்கலாம் என்ற உத்தரவை தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்.

 

ஏனெனில், 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பாதி தேர்வுகளை கொரோனா வைரஸ் அச்சத்திலேயே தேர்வு எழுதினர். மேலும் நீட் தேர்வில் பங்கு கொள்ளும் மாணவர்கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதால் அதில் எந்த பாதிப்பும் வர வாய்ப்பில்லை.

 

அதே போன்று10 ம் வகுப்பு பொதுத் தேர்வையும் வகுப்புகளில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம் என்ற உத்தரவை கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் நலன் கருதி தமிழக முதல்வர் உத்தரவிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன் என சா.அருணன் தெரிவித்துள்ளார்.


Leave a Reply