“டார்ச் லைட்டை நாம என்னைக்கோ கையிலெடுத்து விட்டோமே!!” பிரதமர் மோடி அறிவிப்பு பற்றி கமல் கிண்டல்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : எம்.கே,டி


பிரதமர் மோடி உரையாற்றப் போகிறார் என்றவுடன், பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் பற்றியெல்லாம் அறிவிப்பு வெளியிடப் போகிறார் என்று எதிர்பார்த்தால், நாம் என்றைக்கோ கையில் எடுத்த டார்ச்சுக்கே இன்று தான் வருகிறார் என்று கமல் கிண்டலடித்துள்ளார்.

 

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய போது,கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து விட்டு 9 நிமிடங்களுக்கு அகல் விளக்கு அல்லது மெருகுவர்த்தி அல்லது டார்ச் லைட் அல்லது மொபைல் போனில் வெளிச்சம் பாய்ச்ச வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.

விளக்கேற்றி வெளிச்சம் பாய்ச்சுங்கள் என்ற பிரதமர் மோடியின் இந்த அழைப்புக்கு நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் பலவும் மோடியின் இந்தக் கருத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.நாட்டின் பிரதமராக பேசுகிறாரா? அல்லது ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவர் போல பேசுகிறாரா? என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் மோடியின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பெரும் குரல்கள் எழுந்து சர்ச்சையாகிக் கிடக்கிறது.

 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமலும் மோடியின் கருத்தை விமர்சித்து டுவிட்டரில் பதி விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: பிரதமர் மோடி பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்பு கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழை மக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என எதிர் பார்த்தோம். ஆனால் என்றைக்கோ நாம் கையிலெடுத்த டார்ச்சுக்கே அவர் இன்று தான் வருகிறார் என கமல் டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.


Leave a Reply