--- --:--:-- --

தீபாவளிக்கான 200 லட்சம் பாமாயில் டெண்டர் உத்தரவுக்கு இடைக்கால தடை!

9

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு 200 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகள் வினியோகிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை வாயிலாக மக்களுக்கு பாமாயில் வினியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு லிட்டர் வீதம் சுமார் 600 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை டெண்டர் அறிவிப்பை கடந்த ஜூன் 5-ந்தேதி வெளியிட்டது.

 

இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன. கடந்த செப்டம்பர் 8-ந்தேதி டெண்டர் திறக்கப்பட்டு, 4 நிறுவனங்களுக்கு பாமாயில் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யும் டெண்டர் ஒதுக்கப்பட்டது. இதில், முதல் கட்டமாக 200 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை வருகிற 29-ந்தேதிக்குள் நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு இந்த நிறுவனங்கள் வினியோகம் செய்ய கடந்த செப்டம்பர் 29-ந்தேதி உத்தரவிடப்பட்டது.

 

 

வினியோகம் செய்ய வேண்டிய பாமாயில் பாக்கெட்டுகள் விகிதாசார அடிப்படையில் பிரிக்கவில்லை என்று கூறி நுகர்பொருள் வாணிபக் கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெண்டர் எடுத்துள்ள கே.டி.வி. ஹெல்த் புட் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், 360 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை வினியோகம் செய்ய டெண்டர் எடுத்துள்ள தங்கள் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளை வழங்கவேண்டும் என்றும் 150 லட்சம் பாக்கெட்டுகளை வினியோகம் செய்ய வேண்டிய எம்.ஜி.எம். ஆயில் நிறுவனம் 80 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது சரியானது அல்ல என்பதால், கடந்த செப்டம்பர் 29-ந்தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் விகிதாசார அடிப்படையில் பாமாயில் பாக்கெட்டுகளை வினியோகம் செய்ய உத்தரவிடும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, பாமாயில் வினியோகம் தொடர்பான செப்டம்பர் 29-ந்தேதி நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு வருகிற நவம்பர் 2-ந்தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவிற்கு தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 2-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon