உலக அளவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது..! உயிரிழப்பும் அரை லட்சத்தை தாண்டியது..! பிரான்ஸ், பிரிட்டன் படு வேகம்!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்த நிலையில், உயிரிழப்பும் 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது.ஐரோப்பாவின் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றன.

 

கொரோனா வைரசின் கோரத் தாண்டவம் நாளுக்கு நாள் விஸ்வரூபமெடுத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, பெல்ஜியம், ஹாலந்து ஆகிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு விறுவிறுவென பரவி கலங்கடித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சம் பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப் பட்டு, ஒரு நாளில் மட்டும் 6 ஆயிரம் பேரை காவு வாங்கியுள்ளது.

 

இதனால் உலக அளவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து 10,15, 466 ஆகியுள்ளது. உயிரிழப்பும் 53,190 என உயர்ந்து உலக நாடுகளை மேலும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.

 

உயிரிழப்பில், இத்தாலி (13915) முதலிடத்தில் உள்ளது. ஸ்பெயினில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து 10,348 என கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. அமெரிக்கா (6075), பிரான்ஸ் (5387),பிரிட்டன் (2921), ஹாலந்து (1339) ஆகிய நாடுகளிலும் இப்போது உயிரிழப்பு வேகமெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அடுத்த சில தினங்களில் இரட்டிப்பாகி ஒரு லட்சத்தை தாண்டும் அபாயமும் உள்ளது.

 

இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. இது வரை 2543 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பும் 72 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக உயர்ந்துள்ளது. இந் நிலையில், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் பலரின் ரத்த மாதிரி சோதனை முடிவுகள் இன்னும் வெளியாகாததால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.


Leave a Reply