வங்கிக் கடன் தவணை செலுத்த 3 மாதம் அவகாசம் என்பது சலுகையா..? இல்லை என்கிறது ஸ்டேட் வங்கியின் அறிவிப்பு!!
கொரோனா பாதிப்பால், மாதாந்திர வங்கிக் கடன்களுக்கான தவணையை 3 மாதங்களுக்கு செலுத்த தேவையில்லை என்ற சலுகையை ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், இது ஒன்றும் சலுகை அல்ல; கடன் சுமையை அதிகரிக்கவே செய்யும் என்பது போல ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கி, வேலை வாய்ப்புகளும் பறிபோயுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
வருமானம் இல்லாத நிலையில், வீட்டு வாடகையை சமாளிப்பது எப்படி? வங்கிகளில் வாங்கிய கடனை அடைப்பது எப்படி? என்ற பிரச்னைகள் பலருக்கும் எழுந்த நிலையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு சலுகைகளை அறிவித்தன. இதில் வங்கிகளில் வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், வணிக கடன் உள்ளிட்ட கடன்களுக்கான மாதாந்திர தவணைகளை 3 மாதங்களுக்கு செலுத்துவதில் சலுகை வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்தார். இதனால் அப்பாடா.. இ.எம்.ஐ. செலுத்த வேண்டியதில்லை என பலர் சற்று நிம்மதியடைந்தனர்.
ஆனாலும், இந்த சலுகையால் கடன் தவணை செலுத்த வேண்டியதில்லையா? 3 மாத தவணை தொகையும் தள்ளுபடியாகுமா? இந்த தவணையை காலம் தாழ்த்தி செலுத்தினால் கூடுதல் வட்டி கட்ட வேண்டுமா? என்றெல்லாம் குழப்பங்கள் நிலவின. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாதாந்திர தவணை தொகையை செலுத்துமாறு வங்கிகள் தரப்பில் நினைவூட்டல் மெசேஜ்கள் வழக்கம் போல வாடிக்கையாளர்களுக்கு வரவே குழப்பம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தரப்பில் இந்த குழப்பங்களுக்கு விளக்கம் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்தபடி 3 மாத காலத்திற்கு தவணையை கட்டாயம் செலுத்த வேண்டும் என வங்கிகள் தரப்பில் நெருக்கடி மட்டுமே தரப்படமாட்டாது. ஆனால் இந்த தவணையை வட்டியுடன் பின்னர் செலுத்தியே ஆக வேண்டும். அப்படி காலம் தாழ்த்தி செலுத்தப்படும் தவணையால் கூடுதல் வட்டி சுமை தான் அதிகரிக்கும் என்று ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
இதே போன்ற அறிவிப்பையே ஹெச்.டி.எப்.சி. உள்ளிட்ட பல வங்கிகளும் தெரிவித்துள்ளன. எனவே தவணை செலுத்த இயலாதவர்களுக்கு மட்டும் இது ஒரு அபராதம் இல்லாத சலுகை தானே தவிர, வட்டியுடன் கடன் சுமை ஏறவே செய்யும் என்பதால், முடிந்த மட்டும் வழக்கம் போல தவணையை செலுத்துவதே நல்லது என்ற ரீதியில் வங்கிகள் அறிவிப்பு செய்துள்ளன. ஆக மொத்தத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்த இந்த சலுகை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றே பலரும் விமர்சிக்கின்றனர்.






