“இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2000 ஐ தாண்டியது!!” பலி எண்ணிக்கையும் 58 ஆனது..! உலக அளவில் உயிரிழப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்து 2015 ஆக உயர்ந்து, பலி எண்ணிக்கையும் 58 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் அதிகம் பேர் உயிரிழந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது.

 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகை கிடுகிடுக்க வைத்து வருகிறது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி உலக அளவில் கெரோனா பாதிப்பு 88,585 ஆகவும், உயிரிழப்பு 3050 ஆகவும் இருந்தது. ஒரு மாத காலத்தில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 10 மடங்கை கடந்து 1,94,286 ஆகவும், உயிரிழப்போ 16 மடங்காகி 47,250 ஆக அதிகரித்து உலக நாடுகளை நடு நடுங்க வைத்து வருகிறது.

 

முதலில் சீனாவில் பரவிய இந்த வைரஸ் தொற்றால், அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 3000 ஐ கடந்து முதலிடத்தில் இருந்தது. ஆனால் இப்போது சீனாவை பின்னுக்குத் தள்ளி இத்தாலி (13,155), ஸ்பெயின் (9387), அமெரிக்கா (5110), பிரான்ஸ் (4032) ஆகிய நாடுகள் பெரும் உயிரிழப்பை சந்தித்து வருகின்றன. ஈரான் (3036), பிரிட்டன் (2352), ஹாலந்து (1173) ஆகிய நாடுகளிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

 

இந்தியாவிலும் மெல்ல உயர்ந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 3 நாட்களாக வேகம் எடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 469 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி 2014 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் கடந்த 24 மணி நேரத்தில் 17 அதிகரித்து 58 ஆக உயர்ந்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் 18 பேரும், குஜராத், ம.பி.யில் தலா 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்திலும் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு 234 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இந்த கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply