இன்றைய பலி நிலவரம் 21,297..! விர்ரென உயரும் கொரோனா உயிரிழப்பு..! அலறுகிறது அமெரிக்கா..! ஒரே நாளில்10 ஆயிரம் பேர் பாதிப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


கொரோனா உயிரிழப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்க எண்ணிக்கை 21,297 ஆக உயர்ந்துள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட அந்நாட்டில் உயிரிழப்பு1032 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்கா அச்சத்தில் உறைந்துள்ளது.

 

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் கடந்த 10 நாட்களாக கலவரமான நிலைமையாகியுள்ளது. கடந்த15-ந் தேதியில் இருந்து10 நாட்களில் உயிரிழப்பு எண்ணிக்கையும், பாதிப்பு எண்ணிக்கையும் 3 மடங்காகி உள்ளது. இப்போது இதன் பாதிப்பு வேகம் இன்னும் ஜெட் வேகத்தி உயர்ந்து, உலக நாடுகள் பலவற்றையும் உறையச் செய்து வருகிறது.

 

சீனாவில் கடந்த இரு வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக மிக குறைந்த நிலையில், இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கோரத் தாண்டவமாடி வருகிறது. இந்த நாடுகளில் உயிரிழப்பும், வைரஸ் பாதிப்பும் நாளுக்கு நாள் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.இந்த மோசமான பாதிப்புகள் எல்லாம் கடந்த நாட்களில் தான் மிகவும் அதிகரித்துள்ளன.

 

இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்க தற்போது பலி எண்ணிக்கை 21,297 ஆக உயர்ந்துள்ளது. இதில் டாப்பில் இருந்த சீனா (3287) இப்போது மீண்டெழ , இத்தாலியில் (7503) சீனாவை விட உயிரிழப்பு இருமடங்கை தாண்டி முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக ஸ்பெயினும் (3647) சீனாவை மிஞ்சி 2-வது இடத்தில் உள்ளது.ஈரானிலும் பலி எண்ணிக்கை 2077 ஆகியுள்ள நிலையில் இந்த நாடுகளில் அபாய கட்டத்தில் உள்ளோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால் உயிரிழப்பு இன்னும் பல மடங்காகும் என்றே கூறப்படுகிறது.

 

இப்போது கொரோனா வைரஸ் பரவல் சூறாவளி போல் உலகின் பெரிய அண்ணன் அமெரிக்காவில் மையம் கொண்டுள்ளது. அங்கு கடந்த 15-ந் தேதி வெறுமனே 3400 ஆக இருந்த வைரஸ் பாதிப்பு கடந்த 10 நாட்களில் 20 மடங்கு வரை அதிகரித்து 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை நோய்த் தொற்று தொற்றி, உயிரிழப்பும் ஒரே நாளில்169 ஆகி, மொத்த பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து 1032 என உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் அடுத்தடுத்த தினங்களில் உயிரிழப்பும், பாதிப்பும் மிகவும் மோசமாகும் என்ற பீதியில் உறைந்துள்ளது.

 

இப்படி உலகின் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் சமூக அளவில் பரவி நடுநடுங்க வைத்துள்ளது. இந்நிலையில், இந்தியாவிலும் சமூகத் தொற்றாக மாறிவிடக் கூடாது என ஊரடங்கு உத்தரவைப் போட்டு நாட்டையே முடங்கச் செய்தாலும், பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 15-ந் தேதி இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 112 ஆக இருந்தது. ஆனால் 10 நாட்களில் இந்த எண்ணிக்கை 6 மடங்காகி 660 ஆக உயர்ந்து, உயிரிழப்பும் 14 ஆகியுள்ளது. இதனால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் கடும் விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். அப்படி வராமல் தடுக்கத்தான் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.


Leave a Reply