மாவட்டங்கள் முடக்கம் என்றால் என்ன..? பேருந்துகள் ஓடுமா..? தேர்வுகள் நடைபெறுமா..? குளறுபடியான அறிவிப்புகளால் பெரும் குழப்பம்!!
கொரானா வைர காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முடக்கி, ஊரடங்கு உத்தரவு என அறிவிப்பு வெளியானது முதல், அடுத்தடுத்து வெளியாகும் பல்வேறு குளறுபடியான அறிவிப்புகளால் இந்த மாவட்ட மக்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்கி தனிமைப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக இன்று மாலை அறிவிப்பு வெளியானது. இதில் தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களும் அடங்கும்.இந்த உத்தரவின்படி இந்த 3 மாவட்டங்களும், மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்தப்படும்.அத்தியாவசிய தேவைக்கான பணிகள் தவிர்த்து அனைத்து பணிகளும் முடங்கும். போக்குவரத்தும் தடை செய்யப்படும். அனைத்து கடைகள் உள்பட வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்படும் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள அத்துனை பேரும் திடீரென சிறைப்பிடிக்கப்பட்டது போலான நிலைக்கு ஆளாகி குழப்பத்தில் பரிதவித்தனர்.

மத்திய அரசு 3 மாவட்டங்களை முடக்க உத்தரவிட்ட நிலையில், இந்த முடக்கத்தால் என்னென்ன பணிகள் முடங்கும் என தமிழக அரசுத் தரப்பில் இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது. பேருந்து போக்குவரத்து ரத்தாகும் என்று கூறப்பட்ட நிலையில், சென்னை நகரில் நாளை காலை 5 முதல் மாநகரப் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேபோல் சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கும் , வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது குழப்பத்தை அதிகரித்துள்ளது.
அடுத்தபடியாக, 3 மாவட்டங்கள் முடக்கம் காரணமாக 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒத்தி வைக்கப்படலாம் எனவும் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் மாணவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பள்ளிக்கல்வித் துறை செயலாளரோ, திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் எனவும் இன்னும் 3 தேர்வுகள் மட்டுமே எஞ்சியுள்ளதால், தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித் துறை செயலாளர் தீரஜ் குமார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இப்படியான குளறுபடிகள் நிலவும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவோ, மாவட்டம் முடக்கம் தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து இன்னும் அறிவிப்பே வரவில்லை என்று கூறியுள்ளது பெரும் குழப்பமாகியுள்ளது. இதனால் மாவட்டங்கள் முடக்கம் என்றால் பணிக்கு செல்ல முடியுமா? வெளியில் வேறு வேலைகளுக்கு செல்ல முடியுமா? என்றெல்லாம் உரிய விளக்கம் கிடைக்காமல் 3 மாவட்ட மக்களும் குழப்பத்தில் உள்ளனர்.






