மக்கள் ஊரடங்கு : “வெறிச்சோடிய ஒட்டுமொத்த நகரங்கள்!!” கிராமப்புறங்களிலோ சகஜ நிலை!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரானாவுக்கு எதிரான போர் போல, நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு அனுசரிக்கப்படும் நிலையில், ஒட்டு மொத்த இந்திய நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஆனால், கிராமப் பகுதிகளிலோ சகஜ நிலைதான் நிலவுகிறது.

 

போர்க்காலங்கள், கலவரம், வன்முறை போன்ற பதட்டமான காலங்களில் தான் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, மக்களை வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என அரசாங்கங்கள் கெடுபிடி காட்டுவது வாடிக்கை. ஆனால் கொரானா என்ற கண்ணுக்குத் தெரியாத கொடிய வைரஸ் நோய்க்கு எதிராக ஒட்டுமொத்த உலக நாடுகளும் போர் தொடுக்க வேண்டிய அவலத்துக்கு ஆளாகி பரிதவித்து கிடக்கின்றன.

சீனாவில் முதலில் பரவிய இந்த வைரஸை கட்டுப்படுத்த 3 மாத காலமாக கடும் போராட்டம் நடத்திய அந்த நாடு இப்போது மீண்டெழுந்துள்ளது. கட்டுப்பாடு, கெடுபிடிகள், கடுமையான சட்டங்கள் உள்ள கம்யூனிச நாடு என்பதால் சீனாவில் மக்களும் அரசுடன் ஒத்துழைத்ததே கொரானாவை விரட்டியடிப்பது அந்நாட்டில் சாத்தியமானது. சுந் நாட்டின் பெரும் ராணுவ பலமும், வலுவான பொருளாதார நிலையும் கூட முக்கியக் காரணம் என்றும் கூறலாம்.

 

கொரானா வால் சீனா சின்னாபின்னமாகிய போது உலக நாடுகள் வேடிக்கை பார்த்தன. நமக்கெல்லாம் இந்த வைரஸ் தாக்குதல் பரவாது என பல நாடுகளும் மெத்தனம் காட்டின. ஆனால் சீனாவில் பரவிய வேகத்தை விட கடந்த இரு வாரங்களில் உலகின் பல நாடுகளிலும் விஸ்வரூமெடுத்தது போல பல மடங்கு வேகமாக பரவி விட்டது இந்த நோய்த் தொற்று.

 

இதில், இத்தாலி, ஈரான், ஸ்பெயின் நாடுகளின் நிலைமை இப்போது படுமோசமாகி, இந்த 3 நாடுகளில் மட்டும், கடந்த நான்கைந்து நாட்களாக நாளொன்னுக்கு 1500 பேர் வரை மடிந்து வருகின்றனர். இதனால் இன்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டி விட்டது. பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கையும் 3 லட்சத்தை கடந்து விட்டது.இந்த வைரஸ் அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, பலி எண்ணிக்கையும் 275 ஆகி அந்நாட்டை உலுக்கி வருகிறது.

 

இந்த வைரஸ் நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோரை கண்டறிந்து தனிமைப்படுத்துவதும், பைரஸ் மேலும் பலருக்கு பரவாமல் தடுக்க பொது இடங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது மட்டுமே தீர்வு என்ற முடிவுக்கு அனைத்து நாடுகளும் வந்துள்ளன.

 

இதனால் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் நெருக்கடி நிலை, ஊரடங்கு உத்தரவு, 144 தடை என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து மக்களை வீடுகளுக்குள் அடைந்து கிடக்க கடுமை காட்டுகின்றன. மலேசியாவிலோ 14 நாட்களுக்கு மக்கள் வெளியே வரக்கூடாது; மீறினால் அபராதம், சிறை என ஏக கெடுபிடி காட்டப்படுகிறது.

 

இந்நிலையில் தான் இந்தியாவிலும் கடந்த ஒரு வாரத்தில் கொரானா விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்து 325 ஆகியுள்ளது. உயிரிழப்பும் 5 என உயர்ந்துள்ளது. இதனால், 130 கோடி கொண்ட மிகப் பெரும் நம் நாட்டில், மற்ற நாடுகளில் பரவியது போல் கொரானா பரவினால் என்னாகும்? என்ற பீதி கிளம்பி மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதமாக எடுத்தாலும் கடுமையாக அமல்படுத்த தொடங்கி விட்டன.

ஆனாலும் கொரானா வைரஸ் தாக்குதலை தேசியப் பேரிடராக அறிவித்த மத்திய அரசு பிற நாடுகளைப் போல ஊரடங்கு உத்தரவைப் போட்டு ஒட்டுமொத்தமாக லாக் டவுன் செய்யவில்லை என்றாலும் அதன் ஒரு கட்டமாக இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு என்ற பெயரில் மக்கள் தாங்களாகவே ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இது, கொரானா பாதிப்பு அதிகமானால் நாட்டில் கடுமையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது என்றும் கூறலாம்.

 

அதன்படி இன்று ஒட்டு மொத்த இந்தியாவே மக்கள் ஊரடங்கை தாமாக முன் வந்து அனுசரிக்கின்றன. நாடு முழுவதும் பேருந்து, ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில விமானங்கள் மட்டுமே பறக்கின்றன. பிற வாகனங்களின் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. சிறு நகரங்கள் முதல் பெரு நகரங்கள் வரை அனைத்து வணிக நிறுவனங்களும் கடையடைப்பு செய்து விட்டன. தொழில் நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இதனால் நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடியுள்ளன. மக்கள் ஊரடங்குக்கு நாட்டின் நகர்ப்புறங்களில் நல்ல ரெஸ்பான்ஸ் என்றே கூறலாம்.

 

ஆனால், கிராமங்கள் அதிகம் கொண்ட இந்தியாவில் இந்த கொரானா பற்றிய விழிப்புணர்வு சென்றடைந்ததா? என்பது தெரியவில்லை. வீடுகளுக்குள் அடைந்து கொள்ளுங்கள் என்றால் சகஜமாக நடமாடி வருவதும், ஒரு விடுமுறை தினம் அல்லது பண்டிகை தினம் போல மற்ற நாட்களை விட இன்றைய பொழுதை உற்சாகமாக கழிப்பதாகவே பல கிராமப்புறங்களில் காண முடிகிறது. இதற்கு காரணம் கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை முறை தான் என்றும் கூட கூறலாம்.


Leave a Reply