கொரானாவாவது… மண்ணாங்கட்டியாவது?ஊரடங்கு தினத்தில் ராமநாதபுரத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை அமோகம்..! குடிமகன்கள் கும்மாளம்!!

Publish by: மகேந்திரன் --- Photo :


உலகை அச்சுறுத்தும் கொரானாவுக்கு எதிராக, ஒரு போராட்டம் போல, இன்று இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு என்ற பெயரில், சுயமாக மக்களே தங்களை வீடுகளுக்குள் இருத்திக் கொள்ளும் ஒரு விழிப்புணர்வு இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எங்களுக்கெல்லாம் கொரானா பற்றி எந்தக் கவலையுமில்லை என்பது போல், ராமநாதபுரத்தில் அதிகாலை நேரத்திலேயே கள்ளத்தனமாக மது விற்பனை களை கட்ட குடிமகன்கள் குடித்து கும்மாளம் போடுகின்றனர்.

 

உலகின் பல நாடுகளை கொரானா அலறவிட்டுள்ளது. இந்நோயை நாட்டுக்குள் பரவ விட்டு விட்டு இப்போது கட்டுப்படுத்துவது எப்படி என தெரியாமல் இத்தாலி, ஈரான், பிரான்ஸ் போன்ற நாடுகள் முழி பிதுங்கி நிற்கின்றன. மெல்ல நம் நாட்டுக்குள்ளும் இந்தக் கொரானா அரக்கன் புகுந்து விட்டான். இதன் தாக்கம் முதல் ஸ்டேஜ் என்றார்கள். இப்போதோ இரண்டாவது ஸ்டேஜை கடந்து 3-வது ஸ்டேைஜை நோக்கி நகரும் அபாயத்தில் உள்ளோம் என்றெல்லாம் பீதி கிளம்புகிறது.

 

கொரானா வந்து விட்டால் மருந்தில்லை என்ற நிலையில் அதன் பரவலை கட்டுப்படுத்தும் ஒரே வழி மக்கள் தங்கள் வெளிநடமாட்டத்தை தவிர்த்து வீடுகளுக்குள் ஓரிரு வாரங்கள் முடங்குவது தான் என்பது கட்டாயமாகக் கூறப்படுகிறது. இதனால் தான், நாட்டு மக்களிடம் கொரானா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரீட்சார்த்த முறையில் ஒரு நாள் மட்டும் வெளிநடமாட்டத்தை முற்றிலும் ஒழித்து வீடுகளுக்குள் அடைந்து கொள்ளுங்கள் என, இதற்கு மக்கள் ஊரடங்கு என பெயரிட்டு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

பிரதமரின் இந்த அழைப்புக்கு நாடு முழுவதும் அமோக வரவேற்பு எழுந்தது. இன்று விமானம், ரயில், பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. அனைத்து வணிக நிறுவனங்களும் கடையடைப்பு அறிவித்துவிட்டன.

 

இது போல் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு தினத்தில் இன்று சரக்கு விற்பனை கள்ளத்தனமாக பல இடங்களில் அமோக விற்பனையாகிறது. இதனால் குடிமகன்கள் அதிகாலையிலேயே, பொது இடங்களில் குடித்து கும்மாளம் போடும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

 

ராமநாதபுரம் நகரிலும் இன்று அதிகாலையிலேயே பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதால், திறந்த வெளியிலேயே குடிமகன்கள் குடித்து கும்மாளமிட்டு வருகின்றனர். தடுக்க வேண்டிய இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் கண்டு கொள்ளாதது ஏன்? என்பது தான் புரியாத புதிர். அதுவும் கொரானா என்னும் கொடிய வைரஸ் கிருமியை வென்றொழிக்க நாட்டின் பிரதமர் விடுத்த மக்கள் ஊரடங்கு தினத்தில், கொரானாவாவது மண்ணாங்கட்டியாவது என்ற ரீதியில் குடிமகன்கள், சரக்கு கிடைத்தால் போதும் என அலட்சியப்படுத்துவதை என்னவென்று சொல்வதோ?


Leave a Reply