குடிமகன்களே உஷார்…! “நாளை டாஸ்மாக் சரக்கும் கிடைக்காது!!” லேட்டாக அறிவிப்பு செய்த அமைச்சர் தங்கமணி!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நாளை மக்கள் ஊரடங்கை முன்னிட்டு பேருந்து, ரயில்கள் ஓடாது; அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என அறிவிப்புகள் வெளியான நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையா? இல்லையா? என்பது தான் குடிமகன்களின் கேள்வியாக இருந்து வந்தது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளும் நாளை மூடப்படும் என்ற அறிவிப்பை லேட்டாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

 

கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு, நாளை ( 22-ந் தேதி) ஒரு நாள் முழுவதும் மக்கள் வெளியில் வர வேண்டாம்; நாட்டு மக்கள் 130 கோடி பேரும் வீடுகளுக்குள் இருந்து கொண்டு மக்கள் ஊரடங்கை வெற்றிகரமாக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு, முதலில் மக்களிடையே இதெல்லாம் சாத்தியமா? என்ற ரீதியில் சந்தேகம் எழுந்தாலும், நாடு முழுவதும் இப்போது பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. கொரானோவை எதிர்கொள்ள இந்த சுய பரிசோதனை முயற்சி தேவைதான் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். இதனால் ஒரு நாள் வீடுகளுக்குள் முடங்குவதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கி விட்டனர்.

மக்கள் ஊரடங்கை முன்னிட்டு நாளை அரசுப் பேருந்துகள் ஓடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு, அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். இதேபோல் ரயில்கள், மெட்ரோ ரயில் போக்குவரத்தும் கிடையாது என அறிவிக்க்பபட்டுள்ளது. சின்னஞ்சிறு கடைகள் முதல், ஓட்டல்கள் என அனைத்து விற்பனை நிறுவனங்களும் கடையடைப்பு என அறிவித்துள்ளன. பால் விநியோகமும் கிடையாது என அறிவிக்கப்பட்டு விட்டது.

 

ஆனால் நாளை மக்கள் ஊரடங்கு தினத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்குமா? இல்லையா? என்ற குழப்பம் குடிமகன்களிடம் இருந்து வந்தது. ஏனெனில் கடந்த வாரம் மக்கள் கூடும் வணிக வளாகங்கள், தியேட்டர்கள், அனைத்து பொழுது போக்கு இடங்கள், கிளப்கள், தனியார் பார்கள் என அனைத்தையும் மூட உத்தரவிட்டும், டாஸ்மாக் கடைகள் மட்டும் விதிவிலக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. நாளை மக்கள் ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்ததால், நாளையும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்குமோ? என குடிமகன்கள் கேள்விக்குறியுடன் இருந்து வந்தனர். நேற்றிரவு வரை உத்தரவு எதுவும் வரவில்லை என டாஸ்மாக் கடை ஊழியர்களும், குடிமகன்களுக்கு பதிலளித்து வந்ததால் இந்த குழப்பம் தேத்து வந்தது.

 

இந்நிலையில், நாளை தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்ற உத்தரவை அமைச்சர் தங்கமணி இன்று அறிவித்து குழப்பத்துக்கு முடிவு கட்டியுள்ளார்.


Leave a Reply