“தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரானா!!” டெல்லியில் இருந்து சென்னை வந்தவருக்கு பாதிப்பு உறுதி!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரானா பாதிப்பு உறுதியான நிலையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரத்தைப் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டு சென்னை அரசு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பின், கொரானா அறிகுறி இருப்பதாக சந்தேகப்பட்டு பலரிடம் ரத்த மாதிரி சோதனை நடத்தப்பட்டதில் யாருக்கும் கொரானா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

டெல்லியிலிருந்து சென்னை வந்த நபர் ஒருவருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு நிபுணர் குழுவினர் சிகிச்சை அளித்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே கொரானா பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரம் பொறியாளர் பூரண குணமடைந்து விட்டதாகவும், அவருக்கு என்ன பாதிப்பு என்பதை மருத்துவ தர்மத்தின்படி கூடுதல் தகவல் அளிக்க முடியாது எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே இந்தியாவில் கொரானா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது. இதில் இந்தியர்கள் 126 பேர் என்றும், 25 வெளிநாட்டவர்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


Leave a Reply