--- --:--:-- --

கடந்த 92 நாட்களில் ரூ.128 கோடி மோசடி! ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்

1

2019 ஆம் ஆண்டின் கடைசி 92 நாட்களில் வங்கிகளில் டெபிட் கார்டு மற்றும் இணையவழி மூலம் சுமார் 128 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்று இருப்பது ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 6 இணையவழி மோசடிகள் நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

 

2019 ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் ஏடிஎம்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இணையதள பண பரிமாற்றம் உள்ளிட்டவை மூலம் 21,041 மோசடிகள் நடைபெற்றிருக்கின்றன. ஏடிஎம்களில் டெபிட் கார்டு மூலமாக பணம் எடுக்கும் போது தான் அதிக சைபர் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

 

2019 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் 11,058 குற்றங்கள் மூலம் 94 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதே காலகட்டத்தில் 6,117 கிரெடிட் கார்டு சைபர் குற்றங்கள் மூலம் 19 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

 

அடுத்ததாக நெட்பேங்கிங் எனப்படும் இணையவழி பரிமாற்றம் செய்யும்போது 3,866 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதன் மூலம் 13 கோடியே 60 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பது ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. 2017 – 2018 ஆம் ஆண்டில் ஏடிஎம், டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் இணையவழி பரிமாற்ற மோசடிகள் என 34 ஆயிரத்து 791 குற்றச்சாட்டு நிகழ்ந்துள்ளன.

 

இதன்மூலம் 169 கோடி ரூபாய் பண மோசடி நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல் 2018 -2019 ஆம் நிதி ஆண்டில் 52 ஆயிரத்து 304 சைபர் குற்றங்கள் மூலம் 149 கோடியே 40 லட்சம் ரூபாய் பண மோசடி நடைபெற்றுள்ளது. நடப்பு ஆண்டு 2019 – 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டங்களில் 30 ஆயிரத்து 965 சைபர் குற்றங்கள் மூலம் 100 கோடியே 60 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பது ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

 

எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி வாடிக்கையாளர்களின் டெபிட் அல்லது கிரெடிட் அட்டைகளிலிருந்து தகவலைத் திருடுவதன் மூலமே அதிகளவு மோசடிகள் நடைபெற்றிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது . எனவே ஏடிஎம் எந்திரங்களை பயன்படுத்தும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon