--- --:--:-- --

ஜிகே வாசனுக்கு எம்பி பதவி வழங்கியதில் ஓ.பி.எஸ்., இபிஎஸ்.,சின் சாணக்கியத்தனம் உள்ளதாம்..! அமைச்சர் செல்லூர் ராஜு சொல்கிறார்!!

sdg

ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு முரண்டு பிடித்த தேமுதிகவுக்கு கொடுக்காமல், ஜி.கே.வாசனுக்கு வழங்கியதில், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., ஆகியோரின் அரசியல் சாணக்கியத்தனம் உள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 

ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவுக்கு 3 இடங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ள நிலையில், ஒரு இடத்தை கொடுத்தே ஆக வேண்டும் என தேமுதிக மல்லுக்கட்டி வந்தது. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, கூட்டணி உடன்பாடு பேச்சுவார்த்தையில் தங்களுக்கு ஒரு ராஜ்யசபா இடம் வழங்குவதாக அதிமுக தரப்பு கூறியிருந்தது.


எனவே கூட்டணி தர்மத்தை மதித்து இந்த முறை ஒரு எம்பி இடம் வழங்க வேண்டும் என பிரேமலதாவும், எல்.கே.சுதீஷும் அதிமுகவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். ஆனால் அதிமுகவோ, ஒரு இடத்தை திடீரென ஜி.கே.வாசனுக்கு கொடுத்து தேமுதிகவை புறம் தள்ளிவிட்டது. இது தேமுதிகவுக்கு அதிர்ச்சி என்றே கூறலாம்.

 

கூடுதல் வாக்கு வங்கி வைத்துள்ள தேமுதிகவுக்கு வாய்ப்பு தராமல், வாக்கு வங்கி பலமே இல்லாத தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு வாய்ப்புக் கொடுத்ததால் தேமுதிக தரப்பில் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவுடனான கூட்டணி தொடருமா? என்பதும்கூட கேள்விக்குறியாகியுள்ளது தங்களுக்கு எம்பி சீட் கொடுக்காதது வருத்தம் என்றும் கூட்டணி தர்மத்தை அதிமுக மதிக்காமல் போய்விட்டது என்றும் தேமுதிக தரப்பில் வெளிப்படையாக கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்காமல் ஜி.கே.வாசனுக்கு ஒதுக்கியது ஏன்? என அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்காததிலும், ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு கொடுத்ததிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் அரசியல் சாணக்கியத்தனம் உள்ளது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon