--- --:--:-- --

ரஜினியை திடீரென சந்தித்த திருநாவுக்கரசர் எம்பி..! அரசியல் பேசவில்லை என்கிறார்!!

rt

நடிகர் ரஜினியை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான திருநாவுக்கரசர் இன்று திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பில் தனது பேரனின் பிறந்தநாளை முன்னிட்டு, ரஜினியிடம் வாழ்த்து பெறுவதற்காக வந்ததாகவும் அரசியல் எதுவும் பேசவில்லை என்றும் திருநாவுக்கரசர் மழுப்பலாக பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காண தயாராகி வருகிறார் என்றே தெரிகிறது.கடந்த ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கட்சி தொடங்குவது பற்றியும், வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்பது எப்படி என்பது பற்றியும், தேர்தலில் யார் யாருக்கு வாய்ப்பு என்பது பற்றியெல்லாம் தீவிர ஆலோசனை நடத்தியதாக இப்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பாக உள்ளது.

 

அதற்கேற்ப ரஜினியும் அடுத்தடுத்து அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக, மூத்த அரசியல் தலைவர்கள் , நீண்டகால நண்பர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டும் வருகிறார். நேற்று இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசனை தனது வீட்டில் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார் ரஜினி.

இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் எம்பி, ரஜினியை அவருடைய போயஸ் இல்லத்தில் திடீரென சந்தித்தார். சுமார் ஒரு மணிநேரம் சந்திப்புக்கு பின் வெளியில் வந்த திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரஜினி எனக்கு நீண்டகால குடும்ப நண்பர். எனது பேரனின் பிறந்த நாளை முன்னிட்டு மகள், மருமகன், பேரனுடன் ரஜினியிடம் ஆசி பெற வந்ததாக தெரிவித்தார்.

 

ரஜினி கட்சி தொடங்க உள்ள நிலையில் அரசியல் ஆலோசனை வழங்கினீர்களா? என்று கேட்டதற்கு, ரஜினி ஒன்றும் தெரியாதவர் அல்ல . சினிமா, அரசியல் அனுபவம் உள்ளவர். பொது வாழ்க்கையில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவருக்கு எல்லா அனுபவமும் உள்ளது. நான் ஒன்றும் ஆலோசனை கூறும் நிலை இல்லை. எங்கள் சந்திப்பில் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்று கூறிவிட்டு திருநாவுக்கரசர் நழுவினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon