ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்!!

திமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் இளங்கோ ஆகியோர் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 2-ந் தேதியுடன் 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் இந்த 6 ராஜ்யசபா எம்.பி.இடங்களுக்கும் வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

இந்த ஆறு இடங்களில் அதிமுகவுக்கு மூன்று இடங்களும் திமுகவுக்கு மூன்று இடங்களும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ள திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த என்.ஆர்.இளங்கோ ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மூன்று பேரும் தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அப்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

 

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலும் இன்று வெளியாகி உள்ளது. அதிமுக, திமுக சார்பில் தலா 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்யும் நிலையில், 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply