சட்டப்பேரவையில் கொரானோ முன்னெச்சரிக்கை..! எம்எல்ஏக்களுக்கு கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு!!
தமிழக சட்டப்பேரவையில் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரவைக்கு வரும் எம்எல்ஏக்களுக்கு கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்த சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
கொரானோ வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்த ஆட்கொல்லி கொரானோ வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகிறது என்பதால், கைகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். முகக் கவசம் அணிவது அவசியம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
சீனாவைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளுக்கும் வேகமாக பரவி வரும் இந்த நோய்த் தொற்று இந்தியாவிலும் காலடி வைத்து பீதியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்திலும் 2 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால், தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூடும் முன், சட்டப் பேரவைக்கு வருகை தந்த எம்எல்ஏக்களுக்கு, கொரானோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக எம்எல்ஏக்களுக்கு கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்து விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக எழும்பூர் மருத்துவமனையைச் செவிலியர்கள் 30 பேர், 5 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் மற்றும் அமைச்சர்கள் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. மேலும் கொராேனா முன்னெச்சரிக்கை தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




