தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி..! அமெரிக்காவிலிருந்து வந்த 15 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை!!

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்த 15 வயது சிறுவன் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளான்.

 

கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது.சீனாவை நிலை குலையச் செய்துள்ள இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. உலகின் 88 நாடுகளில் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாகவும், சீனா உட்பட ஈரான், தென்கொரியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3500 ஐ தாண்டியுள்ளது .இந்த வைரஸ் தாக்குதல் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 34 பேருக்கு கொரானோ வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

 

தமிழகத்திலும் இந்த கொடிய வைரஸ் காலடி எடுத்து வைத்துள்ளது இப்போது பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஓமன் நாட்டிலிருந்து வந்த தமிழர் ஒருவருக்கு இந்த நோய் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயது நபருக்கு கொரானா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டு ரஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவன் ஒருவனுக்கு அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டு சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அடுத்தடுத்த இரு நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு இந்த வைரஸ் அறிகுறி உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னைக்கு வரும் விமான பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே சென்னையில் இருந்து அரபு நாடுகளுக்கு செல்லும் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply