43 ஆண்டுகள் பேராசிரியர் க.அன்பழகன் அலங்கரித்த பதவி காலி..! திமுக பொதுச் செயலாளராகிறார் துரைமுருகன்?
திமுகவின் பொதுச் செயலாளராக,1977 முதல் வாழ்நாளின் இறுதி வரை ஏறத்தாழ 43 ஆண்டுகள் அப்பதவியை அலங்கரித்த பேராசிரியர் க. அன்பழகன் மறைந்து விட்டார். இதனால் திமுக பொதுச் செயலாளர் என்ற உயரிய பதவியை அலங்கரிக்கப் போவது யார்? என்ற கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளது. இருந்தாலும், கட்சியில் சீனியரான துரைமுருகன் தான் பொதுச் செயலாளராவார் என்று கூறப்ப்டுகிறது.
பேரறிஞர் அண்ணா, 1949-ல் திமுகவை தொடங்கி தொடர்ந்து 20 ஆண்டுகளாக 1969-ல் அவர் இறக்கும் வரை கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அதன் பின் கட்சியின் தலைவரான மு.கருணாநிதியும், இறக்கும் வரை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலம் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கட்சியை கட்டிக் காத்தார். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு இப்போது மு.க.ஸ்டாலின் தலைவராகி விட்டார்.
திமுகவில் தலைவர் பதவிக்கு அடுத்து மிக மிக முக்கியமான அதிகாரம் மிக்க பதவியாக கருதப்படுவது பொதுச் செயலாளர் பதவி தான்.கட்சியின் முக்கிய அறிவிப்புகள் அனைத்துமே பொதுச் செயலாளர் பெயரில் வெளியாவது தான் வழக்கம்.

கடந்த 1977 முதல் இந்தப் பதவியில் தொடர்ந்து 43 ஆண்டு காலம் இருந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். கட்சியின் தலைவராக கருணாநிதியும், பொதுச் செயலாளராக க.அன்பழகனும் தோழமையுடன் நட்பு பாராட்டி, கட்சி சந்தித்த பல சோதனைகளை எதிர்கொண்டதில் க. அன்பழகனின் பங்கு அளப்பரியது. இத்தனை ஆண்டுகால பதவியில், கட்சியில் தன்னால் எந்த ஒரு சிறு சிறு சலப்புக்கும் இடம் எந்தவரில்லை என்ற பெருமை படைத்தவர் க.அன்பழகன் என்றால் மிகையாகாது.
இப்படி பொதுச் செயலாளர் பதவியில் திமுகவுக்கு பெருமை சேர்த்த பேராசிரியர் இப்போது மறைந்து விட்டார். இதனால் திமுகவின் புதிய பொதுச் செயலாளர் யார்? என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது. திமுக தொடங்கிய கால கட்டத்தில் இருந்த தலைவர்களின் சகாப்தம் என்பது க.அன்பழகனின் மறைவுடன் முடிந்து விட்டது. இரண்டாம் சகாப்த தலைவர்கள் என்று பார்த்தால், அது 1960 களில் இந்தி எதிர்ப்பு போராட்டக் காலத்தில் கட்சியில் தீவிரம் காட்டியவர்கள் தான். அப்படிப்பட்ட தலைவர்களிலும் இப்போதைக்கு கட்சியில் புகழுடன் இருப்பவர்கள் என்று பார்த்தால், தற்போது பொருளாளராக இருக்கும் துரைமுருகன் ஒருவர் மட்டுமே சீனியர் . மற்றபடி கட்சியில் உள்ள பெரும்பாலானோர் மு.க.ஸ்டாலின் காலத்து திமுகவினர் என்றே கூறலாம்.
இதனால், புதிய பொதுச் செயலாளர் யார்? என்றால் அனைவரின் கவனமுமே துரைமுருகன் பக்கம் தான் உள்ளது. எனவே கட்சிக்குள் போட்டியே இல்லாமல் துரைமுருகன் பொதுச் செயலாளராவார் என்றே தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




