--- --:--:-- --

பேராசிரியர் க.அன்பழகன் உடல் தகனம்..! கண்ணீர் சிந்திய மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக உடன்பிறப்புகள்!!

2

மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.

 

திமுக பொதுச் செயலாளராக 43 ஆண்டுகள் பதவி வகித்தவரும், அக்கட்சி ஆரம்பித்தபோது இருந்த முன்னோடி தலைவர்களில் தற்போது வரை உயிர் வாழ்ந்த கடைசி தலைவருமான க.அன்பழகன் இன்று அதிகாலை உயிரிழந்தார். பேராசிரியர் என்று கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட க.அன்பழகன், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 75 ஆண்டு கால உற்ற தோழனாக திகழ்ந்தவர்.

கட்சியின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகளாக இருந்து, 4 முறை அமைச்சராகவும், 9 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்து, 98 வயதில் மறைந்த க.அன்பழகன் மறைவு திமுகவுக்கு பேரிழப்பாகும். மறைந்த க.அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. கி.வீரமணி, நல்லகண்ணு,வைகோ, கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், கவிஞர் வைரமுத்து, ரஜினி, கமல் என தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் , திரையுலக பிரமுகர்கள், முக்கியப் பிரமுகர்கள் என பலரும் அன்பழகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். திமுக தலைவர்கள் , நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

 

தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் க.அன்பழகனின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கீழ்ப்பாக்கம் அருகிலுள்ள திருவேலங்காடு மின் மயானத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், தி.க. தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, கனிமொழி உள்ளிட்டோர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செய்து பிரியாவிடை கொடுத்தனர். பின்னர் க.அன்பழகன் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது திமுக தொண்டர் படையினர் க.அன்பழகனுக்கு வீரவணக்கம் என விண்ணதிர முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon