“முப்பால் ஊட்டிய பேராசிரியப் பெரியப்பா”!! க.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் கைப்பட எழுதிய உருக்கமான இரங்கல் கடிதம் !!

பேரறிஞர் அண்ணா 1949-ல் திமுகவைத் தொடங்கிய காலத்தில் இருந்த அக்கட்சியின் முன்னோடித் தலைவர்களில் கடைசித் தலைவராக வாழ்ந்து வந்த இனமான பேராசிரியர் என்றழைக்கப்பட்ட க.அன்பழனும் மறைந்து விட்டார். க.அன்பழகன் மறைவின் மூலம் திமுகவின் மூத்த முன்னோடி தலைவர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது.

 

தந்தை பெரியாரின் சீடராய், பேரறிஞர் அண்ணாவின் அன்புத்தம்பியாய், கலைஞர் கருணாநிதி யின் 76 ஆண்டுகால உற்ற தோழனாய் திகழ்ந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். 1949-ல் திமுக தொடங்கப்பட்ட காலம் முதல் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்ட க. அன்பழகன், 1957-ல் திமுக சந்தித்த முதல் தேர்தலில் வெற்றி பெற்று தன் நண்பர் மு.கருணாநிதியுடன் சட்டப் பேரவைக்குள் அடியெடுத்து வைத்தவர். 1977 முதல் இறக்கும் வரை 43 ஆண்டு காலம் திமுக வின் பொதுச் செயலாளர் என்ற மிகப் பெரும் பதவியை அலங்கரித்தவர்.

கலைஞர் கருணாநிதியை விட 2 வயது மூத்தவரான க.அன்பழகன், பேரறி நர் அண்ணாவின் மறைவுக்குப் பின் கலைஞர் கருணாநிதியுடனே அவருக்கு அடுத்த ஸ்தானத்தில் அரசியலிலும், ஆட்சியிலும் நெடும்பயணம் மேற்கொண்டவர். கருணாநிதி ஒரு முறை, எனக்கு உடன் பிறந்த சகோதரிகள் உண்டு.

 

ஆனால் சகோதரர்கள் கிடையாது.க.அன்பழகன் தான் என் மூத்த அண்ணன் என்று கூறியவர். இதனாலேயே சிறு பிராயம் முதலே க. அன்பழகனை பெரியப்பா என்று அன்போடு அழைப்பதையே பெருமையாகக் கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின் .

 

இதனால் 98 வயதில் இன்று மறைந்த க.அன்பழகன் மறைவு, மு.க.ஸ்டாலினுக்கு பேரிழப்பு என்றே கூறலாம். தன் தந்தை மு.கருணாநிதி மறைந்த போது ஏற்பட்டது துயருக்கு நிகராக அன்பழகனின் மறைவும் மு.க.ஸ்டாலினை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் தந்தை கருணாநிதி மறைந்த போது, இதுவரை தலைவர் என்றே உங்களை அழைத்த நான் ஒரு முறை அப்பா என்று அழைக்கட்டுமா? என்று கண்ணீருடன் மு.க.ஸ்டாலின் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் அனைவரையும் கண் கலங்கச் செய்தது. அது போன்றே பேராசிரியர் க.அன்பழகனை முப்பால் ஊட்டிய பெரியப்பா என விளித்து மு.க.ஸ்டாலின் தன் கைப்பட எழுதியுள்ள உருக்கமான இரங்கல் கடிதம் அனைவரையும் உருகச் செய்துள்ளது.

 

மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அந்த இரங்கல் கடிதத்தின் வாசகம் இதுதான் :

 

திராவிடச் சிகரம் சாய்ந்துவிட்டது.! சங்கப் பலகை சரிந்துவிட்டது…!
இனமான இமயம் உடைந்துவிட்டது…! எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்…! என்ன சொல்லித் தேற்றுவது எம் கோடிக்கணக்கான கழகக் குடும்பத்தினரை..?

 

பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர்! முத்தமிழறிஞர் கலைஞரைத் தாங்கும் நிலமாய் இருந்தவர்! எனது சிறகை நான் விரிக்க வானமாய் இருந்தவர்! என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வது…?

 

தலைவர் கலைஞர் அவர்களோ என்னை வளர்த்தார்! பேராசிரியர் பெருந்தகையோ என்னை வார்ப்பித்தார்! எனக்கு உயிரும், உணர்வும் தந்தவர் கலைஞர்…! எனக்கு ஊக்கமும், உற்சாகமும் ஊட்டியவர் பேராசிரியர்…! இந்த நான்கும் தான் என்னை இந்த இடத்தில் இருத்தி வைத்துள்ளது…!!

 

“எனக்கு அக்காள் உண்டு; அண்ணன் இல்லை; பேராசிரியர்தான் என் அண்ணன்” என்றார் தலைவர் கலைஞர்! “எனக்கும் அத்தை உண்டு, பெரியப்பா இல்லை” பேராசிரியப் பெருந்தகையையே பெரியப்பாவாக ஏற்று வாழ்ந்தேன்…! அப்பாவை விட பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவதுதான் சிரமம்… ஆனால் நானோ, பேராசிரியப் பெரியப்பாவினால் அதிகம் புகழப்பட்டேன்!!

 

அவரே என்னை முதலில் “கலைஞருக்குப் பின்னால் தம்பி ஸ்டாலினே தலைவர்” என்று அறிவித்தார்…! எனது வாழ்நாள் பெருமையை எனக்கு வழங்கிய பெருமகன் மறைந்தது என் இதயத்தை பிசைகிறது…! அப்பா மறைந்தபோது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன்… இன்று பெரியப்பாவும் மறையும்போது என்ன சொல்லி என்னை நானே தேறுதுல் சொல்வேன்?!

பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்… இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன்? இனி யாரிடம் பாராட்டு பெறுவேன்? என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன்?!

 

பேராசிரியப் பெருந்தகையே! நீங்கள் ஊட்டிய இனப்பால், மொழிப்பால், கழகப்பால் இம்முப்பால் இருக்கிறது… அப்பால் வேறு என்ன வேண்டும்?! உங்களது அறிவொளியில் எங்கள் பயணம் தொடரும்… பேராசிரியப் பெருந்தகையே!

 

கண்ணீருடன்… மு.க.ஸ்டாலின்

 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் கடிதம் எழுதி பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.


Leave a Reply