ஜெ பிறந்த நாள் விழா : கோவையில் 72 ஜோடிகளுக்கு 22-ந் தேதி திருமணம்..! கால்கோள் நாட்டிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் வரும் 22-ம் தேதி 72 ஜோடிகளுக்கு, 72 வகையான சீர்வரிசையுடன் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் நாட்டும் நிகழ்ச்சியை பேரூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

 

இதனைத்தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது:தமிழகத்தை முதன்மை மாநிலமாக முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். நமது முதலமைச்சர் 11 மருத்துவக்கல்லூரிகளை பெற்று தந்து சரித்திர சாதனை படைத்துள்ளார்.

 

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை எந்தவித பிரச்னையும் இல்லை.142 ஆண்டுகள் இல்லாத வறட்சி வந்தபோது கூட சமாளித்துள்ளதாகவும்,கோவை மாவட்டத்தில் போதிய மழை பெய்து, அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உள்ளது.அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டு குடிமராமத்து பணிகள் முழுமையாக கோவை மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை வந்தால் போர்வெல் போடப்பட்டு உடனடியாக சரி செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

விருதுநகரில் குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ் செய்தியாளர் தாக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஆர்.எஸ்.பாரதியை விட ஊடகங்களை யாரும் தரக்குறைவாக பேசிவிட முடியாது. அதற்கே ஊடகங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அதற்கு எதுவும் பேசவில்லை. தவறு நடந்தால் சுட்டிக்காட்டக்கூடிய பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

 

இந்த கால்கோள் நாட்டு விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், எட்டிமடை சண்முகம், சூலூர் கந்தசாமி, கஸ்தூரி வாசு,ஆவின் சேர்மன் கே.பி.ராஜூ எஞ்சினியர் சந்திரசேகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply