--- --:--:-- --

அரங்கேறும் பெண் சிசு கொலை! ஸ்டாலின் கண்டனம்!

4

மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள மீனாட்சி பட்டு கிராமத்தில் வைர முருகன், சௌமியா தம்பதிக்கு ஒரு மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி குழந்தை உயிரிழந்ததாகக் கூறி வீட்டின் அருகே புதைக்கப்பட்டது. போலீசாரின் சந்தேகத்தின் பெயரில் உடலை தோண்டி எடுத்து விசாரணை செய்ததில் எருக்கம்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததால் பெற்றோரை கைது செய்தனர்.

 

வறுமையில் வாடும் தங்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் பெண் பிறந்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கிடையே உசிலம்பட்டி அருகே கோவில் குளத்தை சேர்ந்த பவித்ரா, ஜெயபாண்டி தம்பதியின் 20 நாள் பெண் குழந்தையும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.

 

இவர்களுக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 18ஆம் தேதி செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. அப்போது இருந்தே மூக்கிலிருந்து நீர் வடிந்து வந்ததாகவும் இன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் கூறி அதே மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீசார் குழந்தையின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதற்கிடையே பெண்சிசுக்கொலை மீண்டும் தலை தூக்குவது வேதனை அளிப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெண்மையை போற்றும் தமிழக பண்பாட்டுக்கு பெண் சிசுக்கொலை அவமானம் எனவும் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றி கொன்று வைத்திருப்பது பதற வைப்பதுடன், கண்டனத்துக்குரிய இந்த செயலில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon