திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஒன்றிய தலைவர் தேர்தலின்போது திமுக, அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆர்கே பேட்டை ஒன்றியத்தில் 16 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு அதிமுக சார்பில் 7 பேரும், அந்த கட்சியின் கூட்டணி சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர்.திமுக சார்பில் ஆறுபேரும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரசை சேர்ந்த இருவர் உட்பட 8 பேரும் வெற்றி பெற்றனர்.
இரண்டு கட்சிகளும் சம அளவிலான உறுப்பினர்களை பெற்றிருப்பதால் ஒன்றியக் குழு தலைவர் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. கடந்த மூன்று முறை நடைபெற்ற மறைமுக தேர்தலின் போது திமுக மற்றும் அதன் கூட்டணியை சேர்ந்த 8 பேர் மட்டுமே அவையில் கூடியிருந்தனர்.
அதனால் இரண்டு முறையும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மூன்றாவது முறையாக காலை 11 மணிக்கு மறைமுகத் தேர்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் தங்களை ஒன்றிய அலுவலகத்திற்கு அனுமதிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பின் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரஞ்சிதா ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.