--- --:--:-- --

ரஜினி நாளை முக்கிய முடிவு எடுப்பது குறித்து ஆலோசனை!

9

புதிய அரசியல் கட்சி தொடங்கி வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வர உள்ளது.

 

இதனால் ரஜினி ஏற்கனவே அறிவித்தபடி அடுத்த மாதம் தனது அரசியல் கட்சியைத் துவங்குவார் என்று யூகங்கள் கூறப்பட்டு வருகின்றன. அதேசமயம் ரஜினி புதிய கட்சி தொடங்க இருப்பது குறித்து ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியாகும் என அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ் அண்மையில் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை நாளை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் மக்கள் மன்றம் மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

மாவட்ட செயலாளர்களுடன் நாளை ரஜினிகாந்த் நடத்த இருக்கும் ஆலோசனையின் போது கட்சி தொடங்குவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இன்று காலை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை அவரது ஆதரவாளர் தமிழருவி மணியன் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon