ஹைதராபாத்தில் 36 பேருக்கு கொரானா அறிகுறி!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 24 வயதாகும் என்ஜினீயர் ஒருவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். பணி நிமித்தமாக துபாய்க்கு கடந்த மாதம் 15ஆம் தேதி சென்ற அவர் பின்னர் இருபதாம் தேதி பெங்களூரு திரும்பிவந்தார். இரண்டு நாட்கள் அங்கு பணியாற்றிய அவர் பேருந்து மூலம் ஐதராபாத்துக்கு வந்தார்.
அங்கு கடந்த திங்கட்கிழமை உடல்நிலை பாதிக்கப்படவே பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவர் மூலம் வேறு யாருக்கும் கொரானா பரவியிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்தது.
இதனை தொடர்ந்து துபாயில் இருந்து திரும்பிய பிறகு கொரானாவால் பாதிக்கப்பட்ட இன்ஜினியரிடம் தொடர்பில் இருந்த 88 பேர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். உடனடியாக அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் ஹைதராபாத் இஞ்சினியருடன் பேருந்தில் பயணித்த மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 36 பேருக்கு ஒரு கொரானா வைரசுக்கான சில அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து 36 பேரும் தனிமை வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரானா அறிகுறி இல்லாதோர் தொடர்ந்து அவர்கள் வீடுகளிலேயே வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 14 நாட்கள் வரை வெளியே செல்ல வேண்டாம் என்று அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




