“டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க தயார்!!” எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு பணிந்தது மத்திய அரசு!!
டெல்லியில் கடந்த வாரம் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கொடுத்த நெருக்கடிக்கு மத்திய அரசு பணிந்து உள்ளது. மக்களவையில் விவாதம் நடத்த மத்திய அரசு தயார் என அறிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற திடீர் வன்முறையில் 48 பேர் வரை கொல்லப்பட்டனர். வீடுகள் . கடைகள், வாகனங்கள் என ஏராளமான பொருட்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்த இந்த கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
முதலில் டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும். மக்களவையில் மற்ற அலுவல்களை ஒத்தி வைத்து விட்டு உடனடியாக விவாதிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. இதனால் கூச்சலும், குழப்பமும் அமளியும் ஏற்பட்டதால் நேற்று நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்றும் இதே பிரச்சினைகள் தொடர்பாக இரு அவைகளிலும் அமளி நீடித்தது . காலை 11 மணிக்கு இரு அவைகளும் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது. பிற்பகல் 2 மணிக்கு மக்களவை கூடிய போதும் எதிர்க் கட்சி எம்பிக்கள் கடும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் விவாதம் நடத்த மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது என்ற தகவலை வெளியிட்டார். ஆனால் இந்த விவாதம் ஹோலிப் பண்டிகை விடுமுறைக்கு பின்னரே எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் அறிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் உடனே விவாதிக்க வேண்டும் என குரல் கொடுத்தனர். இதனால் கூச்சல் குழப்பம் தொடர்ந்து நிலவியது.
அதனைத் தொடர்ந்து இந்த கூச்சல் குழப்பத்துக்கு இடையே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தொடர்பாக சில தீர்மானங்களை கொண்டு வந்து பேசினார். அவை அனைத்தும் அவசரஅவசரமாக வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டன. பின்னர் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




