கவனம் ஈர்த்த நிர்வாகிகள் சந்திப்பு..!
எந்தவித பின்புலமும் இல்லாமல், சின்னத்திரை மூலம் மக்கள் மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் வெள்ளித்திரையின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கிய சிவகார்த்திகேயன், தற்போது ‘சேயோன்’ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.
மறுபுறம், நற்பணி மன்றங்களாக மேம்படுத்தப்பட்ட சிவகார்த்திகேயனின் ரசிகர் மன்றங்கள் ரத்த தானம், கல்வி உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை வழங்கி வருகின்றன. இந்த சூழலில், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பகுதி அளவிலான நிர்வாகிகள் என அரசியல் கட்சி போன்று அமைப்பு ரீதியிலான நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சென்னை போரூர் அருகே பரணிபுத்தூர் பகுதியில் நடந்த இந்தக் கூட்ட அரங்கின் நுழைவாயில் முகப்பு, கோட்டை போன்று பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது அரசியல் தளத்திலும் கவனம் ஈர்த்துள்ளது. கட்சித் தொண்டர்கள் போன்று ஒரே மாதிரியான வெள்ளை சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன், சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
நிர்வாகிகள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன், குடும்பம்தான் முதலில் என அறிவுறுத்தினார். தினமும் 15 நிமிடங்களாவது புத்தகங்களை வாசிக்க வேண்டுமென நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்ட அவர், சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்க புத்தகங்கள் நல்ல மாற்றாக இருக்கும் எனக் கூறினார்.
என்ன செய்தாலும் குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள் எனக் கூறிய சிவகார்த்திகேயன், நதி தன்னோட வழியை உருவாக்குவது போன்று நமது வேலைகளை செய்துக் கொண்டே இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். கூட்டம் முடிந்த பிறகு, மண்டபத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தக அரங்கை சிவகார்த்திகேயன் பார்வையிட்டார்.
’கோட்’ படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள், சிவகார்த்திகேயனை தனது கலையுலக வாரிசாக விஜய் அறிவிக்கும் வகையில் இருப்பதாக கருத்துகள் எழுந்தன. விஜய், அரசியலுக்கு என்ட்ரி கொடுத்த சில மாதங்களிலேயே அரியணையில் அமர்ந்துள்ள சூழலில், தனுஷ், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டங்கள் கவனம் ஈர்த்தன. குறிப்பாக, தனுஷ் அரசியலுக்கு வர இருப்பதாகப் பேச்சுக்கள் அடிபடும் நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த நகர்வுகளும் அரசியல் வட்டாரத்தை கவனிக்க வைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




