தமிழ்நாட்டில் தமிழ் மொழியை ஆட்சி மற்றும் வழிபாட்டு மொழியாக நடைமுறைப்படுத்த கோரி கோவையில் வருகின்ற 29 ம் தேதி உண்ணாநிலை போராட்டம் நடத்த உள்ளதாக பேரூராதீனம் மருதாசல அடிகளார் தெரிவித்துள்ளார்.
கோவை ஆடிஸ் வீதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தொடக்க நிலையில் இருந்து கல்லூரி கல்விகளில் தமிழ் வழிக்கல்வியை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும்,அனைத்து கோவில்களிலும் குட முழுக்கு, வழிபாடுகளில் தமிழையே பயன்படுத்த வேண்டும் எனவும், தமிழே ஆட்சி மொழி என்பதை தமிழக அரசு அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு 80 சதவீத வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரினார். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மொழிக்காப்புக் கூட்டியக்கம் சார்பில் வருகின்ற 29 ம் தேதி கோவை சிவானந்தா காலனி பகுதியில் ஒருநாள் அடையாள உண்ணாநிலை போராட்டம் நடைபெற உள்ளது எனவும்,இதில் 60 க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்பினரும்,தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்க உள்ளனர் எனவும் அவர் கூறினார்.
இதனையடுத்து பேசிய தமிழ்மொழிக்காப்பு கூட்டியகத்தின் தலைவர் அப்பாவு பேசுகையில் தற்போதைய சூழலில் குழந்தைகள் நாவில் கூட தமிழ் இல்லை எனவும்,அழிந்து போகும் நிலையில் தமிழ் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தமிழ் மொழி காப்பாற்ற பட வேண்டும் என்ற நோக்கில் இந்த கூட்டியிக்கம் துவங்கப்பட்டு உள்ளதாகவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேராசிரியர் சிற்பி,புலவர்கள் இரவீந்திரன்,கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.