ஓராண்டு நிறைவடைந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு…!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடங்கி ஓராண்டு ஆகியிருக்கும் நிலையில் வழக்கின் நகர்வுகள் மற்றும் தற்போதைய நிலை என்ன?

 

கடந்தாண்டு பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒரு புகாரை அளிக்கிறார். அந்த புகார் மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்பதை அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை. தனக்கு அறிமுகமான சபரிராஜன் என்பவர் அழைத்ததன் பேரில் காரில் சென்றபோது அவருடைய நண்பர்களான திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் உள்ளிட்ட நான்கு பேரால் பாலியல் சித்திரவதைக்கு ஆளானதாகவும் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் கூறி கல்லூரி மாணவி புகார் அளித்திருந்தார்.

 

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்தப் பெண் மட்டுமின்றி பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி மிரட்டல் விடுத்தது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

ஆனால் வேறு எந்த பெண்களும் இந்த வழக்கில் புகார் அளிக்க முன்வரவில்லை. கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று குரல் ஒருபுறம் ஒலிக்க வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆனால் அரசியல் பிரமுகர்களின் தலையீடு இருப்பதால் சிபிசிஐடி விசாரணை நேர்மையாக இருக்க வாய்ப்பில்லை என்ற அடுத்தடுத்த குற்றச்சாட்டும், போராட்டங்களும் ஓயாததால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

 

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மணிவண்ணன் என்பவரையும் பாலியல் வன்கொடுமை வழக்கின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக கடந்த மே மாதமே சுமார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

 

பல்வேறு தரப்பினர் இந்த சம்பவத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பாதுகாப்பு கருதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஒருமுறைகூட கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த மாதம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதையொட்டி முதன்முறையாக ஆஜர்படுத்தப்பட்டனர். அடுத்த மாதத்துடன் வழக்கில் கைது செய்யப்பட்ட மணிவண்ணன் என்பவரை தவிர மற்ற நான்கு பேர் மீதும் போடப்பட்ட குண்டர் சட்டம் கால முடிவடைவதால் ஜாமீன் கிடைக்க சட்டத்தில் வழி இருக்கிறது.

 

இதனால் அவர்களை ஜாமீனில் விடுவிக்க கூடாது என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது விசாரணை தீவிரம் அடைந்தால் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


Leave a Reply