தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வேணும்..! பிரேமலதா விஜயகாந்த் கறார்..! முதல்வர் எடப்பாடி மழுப்பலாக பதில்!!

கூட்டணி தர்மப்படி தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குமாறு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஓபனாக வேண்டுகோள் விடுத்ததற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதிலளித்துள்ளார்.

 

தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி., இடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த இடங்களுக்கு அடுத்த மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள எம்எல்ஏக்களின் அடிப்படையில், ஆளும் அதிமுகவுக்கு மூன்று இடங்களும் எதிர்க்கட்சியான திமுக கூட்டணிக்கு மூன்று இடங்களும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இதனால் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யவே அதிக வாய்ப்பு உள்ளது.

 

தற்போது பதவி முடிவடையும் 6 எம்.பி., க்களில் திமுக தரப்பில் திருச்சி சிவா ஒருவர் மட்டுமே. இதனால் அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது. மற்ற இரு இடங்களுக்கு திமுகவிடம் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது என்றே தெரிகிறது இதில் ஒரு இடத்தை விட்டுத்தருமாறு காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

அதிமுக தரப்பில், தற்போது நான்கு பேரின் பதவி முடிவடைகிறது. இதில் சசிகலா புஷ்பா ஏற்கனவே பாஜகவுக்கு தாவி விட்டார். மீதி உள்ள விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன் போன்றோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தானாம். இதனால் அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பி பதவியை கைப்பற்ற பலரும் முட்டிமோதி வருவதாக தகவல்.

இதில் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி. புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோருக்கு எம்பி சீட் உறுதி என பேச்சுகள் எழுந்துள்ளன. ஆனாலும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாமல் இழுபறி தான் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் தேமுதிக தங்களுக்கு ஒரு எம்.பி சீட்டை வழங்க வேண்டுமென திடீர் நெருக்கடி கொடுத்து ஒற்றைக்காலில் நிற்பதாக தகவல் வெளியானது. கூட்டணியில் உள்ள பாமகவுக்கு கடந்த ஆண்டு ராஜ்யசபா இடத்தை விட்டுக் கொடுத்தது போல் இந்த ஆண்டு தங்கள் கட்சிக்கு ஒரு எம்பி சீட் கொடுத்தே தீர வேண்டும் என்ற கோரிக்கையை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வெளிப்படையாகவே தெரிவி்த்துள்ளார்.

 

கூட்டணி தர்மப்படி தங்கள் கட்சிக்கு ராஜ்யசபா எம்பி இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டியது அவசியம் என பிரேமலதா விஜயகாந்த் நெருக்கடி கொடுத்துள்ளார். அதிமுகவுடனான கூட்டணி குறித்து பிரேமலதா கடந்த சில மாதங்களாகவே ஏட்டிக்கு போட்டியாகவே கருத்து கூறி வருகிறார். குட்டக்குட்ட குனியும் ஜாதி தேமுதிக கிடையாது.

 

அடுத்தாண்டு கேப்டன் தலைமையில் ஆட்சி என்றெல்லாம் மிரட்டல் விடுவது போல் பிரேமலதா பேசி வருகிறார். இது அடுத்தாண்டு கூட்டணியில் தொடர்வதற்கு அதிமுகவுக்கு கொடுக்கும் நெருக்கடி என்றே பார்க்கப்படுகிறது. அதன்படி தான் இப்போது ராஜ்யசபா சீட் வேண்டும் என்று பகிரங்கமாகவே தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

ஆனால், அதிமுக தரப்போ தேமுதிகவின் இந்த திடீர் நெருக்கடியை ரசிக்கவில்லை என்பது போல் பதிலடி தராமல் அமைதி காக்கின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படிதான் அன்புமணிக்கு எம்பி பதவி வழங்கப்பட்டது. ஆனால், தேமுதிகவுடன் கூட்டணி உடன்பாடு செய்தபோது அப்படி ஒரு ஒப்பந்தம் போடப்படவில்லை. இப்போது திடீரென தேமுதிக நெருக்கடி கொடுப்பது ஏனென அதிமுகவில் சலசலப்பு கூட எழுந்துள்ளதாம்.

 

இந்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு, எங்கள் கட்சியிலேயே பல மூத்த தலைவர்கள் உள்ளனர். தேமுதிகவின் கோரிக்கைக்கு உடனடியாகப் பதில் கூறமுடியாது. எதுவாக இருந்தாலும் கட்சித் தலைமை இதில் பேசி முடிவெடுக்கும் என்று மழுப்பலாக கூறி, நன்றி வணக்கம் என கூறிவிட்டு செய்தியாளர் கூட்டத்தையே கட் செய்து விட்டு கிளம்பி விட்டார்.

 

இதனால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான் என்பது தெரிகிறது. சீட் ஒதுக்காவிட்டால் தேமுதிக ரியாக்ஷன் என்ன என்பதும் கூடிய விரைவில் தெரியப்போகிறது.


Leave a Reply