விசுவரூபமெடுக்கும் கொரானோ வைரஸ் அச்சுறுத்தல்..! சீனாவில் “மிகப் பெரிய சுகாதார அவசர அவசர நிலை” பிரகடனம்!!
சீனாவில் கொரானோ வைரஸ் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவது மிகப் பெரும் சவாலாக அமைந்துள்ள நிலையில், அந்நாட்டில் மிகப்பெரும் சுகாதார அவசர நிலையை அதிபர் ஜிஜின்பிங் பிரகடனம் செய்துள்ளார்.
கொரானோ வைரஸ் பாதிப்பால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சீனா தத்தளிக்கிறது. வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸ் தாக்குதலால், உலகின் மிகப் பெரும் சக்தி படைத்த சீனாவே நிலை குலைந்து, அந்நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைந்துள்ளது.
கொரானோ வைரஸ் பாதிப்பால் சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 2500 ஐ தாண்டியுள்ளது.சீனா முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் உலகின் பிற நாடுகளுக்கும் வேகமாக பரவுவதால் சர்வதேச நாடுகளும் பீதியில் உறைந்துள்ளன.

தென் கொரியா, ஈரான், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதலால் சிலர் பலியாகியுள்ளனர். இதனால் சீனாவுடனான போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்புகளையும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இதனால் கொரானோ வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தலை , சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு கடந்த 1-ந்தேதி பிரகடனம் செய்தது.
இந்நிலையில், கொரானோ வைரஸ் அச்சுறுத்தல் சீனாவில் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளது. இதனால் சீனாவில் மிகப் பெரிய சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் இன்று பிரகடனம் செய்துள்ளார். சீனாவின் சரித்திரத்தில் இது போன்ற அவசர நிலை பிரகடனம் செய்வது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




