ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த டிஜிட்டல் விஷன் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் கோல்ட் பெஸ்ட் பிசி எனப்படும் இருமல் சிறப்பு மருந்து தயாரிக்கிறது. இந்த மருந்தில் உள்ள டைத்திலின் கிளிக்கால் என்ற நச்சுப்பொருள் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் 9 சிறார்களுக்கு உயிர் இழப்பை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மருந்து கட்டுப்பாட்டு துறை அனுப்பிய சுற்றறிக்கை தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து இணை இயக்குனர்களுக்கும், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தினருக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கோல்ட் பெஸ்ட் பிசி என்ற இருமல் சர்ப்பம் மருந்தில் டைத்திலின் கிளிக்கால் என்ற நச்சுப் பொருள் இருப்பதால் இந்த மருந்தை வாங்க, விற்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 கோல்ட் பெஸ்ட் பிசி மருந்து பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் மாதிரிகள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.