வனத்தீ ஏற்பட காரணமானவர்கள் மற்றும் உடந்தையாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – வனத்துறை எச்சரிக்கை !!!
தமிழகம் முழுவதும் கோடை காலம் துவங்கும் முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.இதனால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி செடிகள்,மரங்கள் காய்ந்து வருகிறது.காட்டுத்தீ ஏற்பட்டால் தீ மளமளவென பரவி வனப்பகுதி முழுவதும் அழிவதோடு,அங்கு வாழும் உயிரினங்களும்,அரிய வகை மரங்களும்,மூலிகை செடிகளும் அழியும் நிலை ஏற்படும்.இந்த நிலையில் காட்டுத்தீ ஏற்படாமல் தவிர்க்க கோவை மாவட்ட வனத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க முதற்கட்டமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள சாலைகளில் மக்கள் பார்வையில் படும் படி வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
அந்த போஸ்டரில் வறட்சியின் போது காப்புக்காடு பகுதிகளில் காய்ந்த சருகு மரக்கிளைகள் மற்றும் எளிதில் தீப்பற்றும் நிலையில் புகைப்பிடிப்பவர்களால் வீசி எறியப்படும் சிகரெட் துண்டுகள் மற்றும் அணைக்காமல் வீசி எறியப்படும் தீக்குச்சிகள் மற்றும் காப்புக்காடு பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்போர் தங்களது நிலங்களை சுத்தப்படுத்தி சேகரமாகும் குப்பைகளை தீயிட்டு கொளுத்துதல் போன்றவற்றால் காட்டுத்தீ எளிதில் பரவி விடுகிறது.
எனவே,வனப்பகுதியை ஒட்டி உள்ள சாலைகளில் உணவு சமைக்க கூடாது.இதனால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு அரிய வகை உயிரினங்கள்,மூலிகை செடிகள்,மரங்கள் அழியும் நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,காட்டுத்தீ பற்றினால் அருகில் உள்ள வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும்,தீயை அணைக்க மக்களும் முயற்சி எடுக்க வேண்டும் எனவும்,வனப்பகுதிகளில் அனுமதியின்றி செல்வதும்,காட்டுத்தீ ஏற்படுத்துவதும் குற்றமாகும் எனவும்,காட்டுத்தீ ஏற்பட காரணமானவர்கள் மற்றும் உடந்தையாக இருப்பவர்கள் மீது வனச்சட்டங்களின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது குறித்து காரமடை வனச்சரகர் சரவணன் கூறும் பொழுது வனப்பகுதியை ஒட்டி உள்ள சாலைகளில் செல்லும் பொழுது கால்நடை மேய்ப்பவர்கள் மற்றும் மக்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்லக்கூடாது எனவும்,வனப்பகுதியில் அத்துமீறி நுழைவது கூடாது எனவும் தெரிவித்தார்.மேலும்,வனத்தீ ஏற்பட காரணமானவர்கள் மற்றும் உடந்தையாக இருப்பவர்கள் மீது வனச்சட்டங்களின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




