வண்ணார்பேட்டை போராட்டத்தை விஷமிகள் தூண்டி விட்டதாக முதல்வர் குற்றச்சாட்டு..! பேரவையில் திமுக வெளிநடப்பு!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடிக்கு சில விஷமிகள் போராட்டத்தை தூண்டி விட்டதே காரணம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 14-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இன்று காலை சட்டப்பேரவை கூடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் குறித்தும் வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் பிரச்சினை எழுப்பினார்.

 

அப்போதுபதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தின் போது போலீசார் மீது கற்கள், செருப்புகள் வீசப்பட்டன. சில விஷமிகள் போராட்டத்தை திட்டமிட்டு தூண்டி விட்டதாக குற்றம் சாட்டினார்.

முதல்வர் பழனிச்சாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி 4 நாட்களுக்கு முன்பே கடிதம் கொடுத்தோம்.

 

ஆனால் அது குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுக்கிறார்.வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாகவும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறித்தும் கேட்டதற்கு முதல்வர் முறையான பதிலளிக்காததால் வெளிநடப்பு செய்து எதிர்ப்பை வெளிப்பத்தியதாக தெரிவித்தார்.


Leave a Reply