3-வது நாளாக நீடிக்கும் இஸ்லாமியர் போராட்டம்..! முதல்வருடன் டிஜிபி, கமிஷனர் அவசர ஆலோசனை!!

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான இஸ்லாமியர்களின் போராட்டம் 3-வது நாளாக நீடிக்கிறது. போராட்டம் பெரிய அளவில் நடைபெறாமல் தடுப்பது குறித்து 2-வது நாளாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவல்துறை டிஜிபி, சென்னை கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 

சிரஏ-க்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் விசுவரூபமெடுத்துள்ளது. இரு நாட்களுக்கு முன் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்திய சிஏஏ எதிர்ப்பு பேரணியில் போலீசார் தடியடி நடத்த, இந்தப் போராட்டத்தின் வடிவமே திசைமாறிவிட்டது. போலீஸ் தடியடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 

இதில், சென்னை வண்ணாரப்பேட்டை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் போராட்டத்தை ராப்பகலாக தொடர்கின்றனர். சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்த கூட்டத்தொடரிலேயே சிஏஏக்கு எதிரான தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என இப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

இதனால் நாளை சட்டப்பேரவை மீண்டும் கூடும் நிலையில், விடுமுறை நாளான இன்று தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் இஸ்லாமியர்களும், அவர்களுக்கு ஆதரவாக வி.சி.க உள்ளிட்ட சில கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

இதனால், போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில் தமிழக அரசுக்கு நெருக்கடி மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முதல்வர் பழனிசாமி கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

 

நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விசுவநாதனை அழைத்து போராட்டம் குறித்தும், தடியடி குறித்தும் விளக்கம் கேட்டார். இந்நிலையில் இன்று 2-வது நாளாக போலீஸ் டிஜிபி திரிபாதி,கமிஷனர் விசுவநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், அப்போது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முக்கிய விவாதம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.


Leave a Reply